• சம்பந்தப்பட்ட அறிக்கைகளை மின்னஞ்சல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்ப நடவடிக்கை
  • இலத்திரனியல் பிரதிகள் பாராளுமன்ற இணையத்தளத்தில் விசேட போட்ரலில் (web portal ) பதிவேற்றம்
  • அறிக்கைகளின் அச்சுப் பிரதிகளின் அவசியத்தைக் கவனத்தில் கொண்டு குழுக்களில் பயன்படுத்தவும், சில பிரதிகளை நூலகத்தில் வைப்பதற்கும் நடவடிக்கை

எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வருடாந்த அறிக்கைகள், செயலாற்று அறிக்கைகள் உள்ளிட்ட ஏனைய அறிக்கைகளின் இலத்திரனியல் பிரதிகள் (Soft Copies) மூலம் வெளிப்படுத்துவதற்கு அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் அத்துடன் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை குறைப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், அச்சிடும் செயற்பாடுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள், தற்பொழுது பயன்பாட்டிலுள்ள குறுந் தட்டுக்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் அவற்றுக்காக அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளமை, அது மாத்திரமன்றி குறுந்தட்டுக்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் கையாழ்வதற்கு அதிகாரி ஒருவரை நியமித்து, குறிப்பிட்ட தினத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் இலத்திரனியல் பிரதிகளை (Soft Copies)  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்,  பாராளுமன்ற இணையதளத்தின் ஊடாக நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மடிக்கணினிகள் மற்றும் டப் இயந்திரங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக  அணுகக் கூடிய வகையில் இலத்திரனியல் பிரதிகளை பாராளுமன்றத்தின் விசேட வெப் போட்ரலில் (web portal) உள்ளீடு  செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இது தொடர்பில் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தி இதற்கான வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்பொழுது தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதுடன், பொதுச் சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் ஈ-அரச சேவையை உருவாக்குவது காலத்துக்குத் தேவையானது என்பதைக் கவனத்தில் கொண்டு இவற்றை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு குழு தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.