01.      1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சட்டத்தை திருத்தம் செய்தல்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு திறைசேரியின் பிரதிநிதி ஒருவரையும் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் அல்லது அவருடைய பிரதிநிதி ஒருவரையும் நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை உள்வாங்கி 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2021.01.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்;கும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.      1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தை திருத்தம் செய்தல்

அரச நிதிச் சுற்றறிக்கை 423 இன் ஏற்பாடுகளுக்கமைய, செயலிழந்துள்ள நியதிச்சட்ட நிதியங்களை முடிவுறுத்துவதற்குத் தேவையான சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இறப்பர் கட்டுப்பாட்டு நிதியம் மற்றும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இறப்பர் மீள்நடுகை நிதியத்தையும் முடிவுறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நிதியங்கள் தொடர்பாக ஏற்புடைய சட்டங்களின் ஏற்பாடுகள் தொடர்ந்தும் அவசியமற்றதென்பதால், குறித்த இரண்டு சட்டங்களும் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தை   திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.      1950 ஆம் ஆண்டின் 43ம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 46 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்தல்

தொழில் நியாய சபை நிறுவப்பட்ட காலம் தொடக்கம் சட்டத்தரணிகள் சமமான மட்டத்தில், தொழில் நியாய சபையில் தரப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜராவதற்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மற்றும் சட்டத்தரணி அல்லாத பிரதிநிதிகளுக்கும் சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அண்மைக்காலம் தொடக்கம் சட்டத்தரணி அல்லாதவர்களுக்கு தொழில் நியாயசபையில் தரப்பினர்கள் சார்பாக ஆஜராவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இந்நிலைமையை தடுப்பதற்காக தொழில் ஆணையாளர் அல்லது அதிகாரம் பெற்ற அலுவலர் ஒருவர், மத்தியஸ்தர் ஒருவர், கைத்தொழில் நீதிமன்றத்தில் அல்லது தொழில் நியாயசபையில் ஆஜராவதற்கு குறித்த தரப்பினர்களால் அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதி ஒருவருக்கு அத்தரப்பினர் சார்பாக ஆஜராவதற்கு இயலுமாகும் வகையில் 1950 ஆம் ஆண்டின் 43ம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2017.02.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்;கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.      2022/23 பெரும்போக நெற் செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன உரங்களுக்கான பெறுகைக் கோரல்

2022/23 பெரும்போகத்தில் 800,000 ஹெக்ரெயார் நெற் செய்கைக்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 2022/23 பெரும்போக நெற் செய்கைக்கு 150,000 மெட்ரிக்தொன் யூரியா உரம், 45,000 மெட்ரிக்தொன் மியுரேட் ஒஃப் பொஸ்பேற் (MOP)  உம், 36,000 மெட்ரிக்தொன் ட்ரிபல் சுப்பர் பொஸ்பேற் (TSP)  உம் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உரத் தொகையை வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.      கனடா உலகப் பல்கலைக்கழக சேவை (World University Service of Canada)நிறுவனத்துடன் தன்னார்வ ஒத்துழைப்பு வேலைத்திட்டம் 2020 – 2027 ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

கனடா உலகப் பல்கலைக்கழக சேவை (றுழசடன ருniஎநசளவைல ளுநசஎiஉந ழக ஊயயெனய) நிறுவனம், உலகளாவிய ரீதியில் குறைந்த சிறப்புரிமைகளைக் கொண்டுள்ள இளம் யுவதிகள் மற்றும் பெண்களுக்கான கல்வி, தொழில் மற்றும் வலுவூட்டல்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதில் தன்னார்வ ஒத்துழைப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறித்த வேலைத்திட்டங்கள் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இருதரப்பினர்களுக்கிடையில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 சூழலில் ஏற்பட்ட பயணத் தடைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த வேலைத்திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படாததுடன், அவ்வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் 10 இன் கீழ் 2.76 மில்லியன் கனடா டொலர்களை வழங்கி குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.      யூரியா உரம் பெறுகைக் கோரலுக்கான இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிலிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரைப் பெற்றுக்கொள்ளல்

2022/ 23 பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரப் பெறுகைக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரை இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுத் தருவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தங்களில் கையொப்பிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.      2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடினமான பொருளாதாரச் சூழ்நிலையால் 2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டின் நடுப்பகுதி தொடக்கம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்கு மேலதிகமாக வேறு அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு செலவிடுவதற்கு நேரிட்டமையாலும், 2022 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படும் போது காணப்பட்ட அமைச்சுக்களின் கட்டமைப்புக்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்துள்ளமையாலும், 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்திற்குப் பதிலாக திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)