இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதியினால் விக்கும் லியனகேவிடம் இந்நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.
மாத்தளை விஜய கல்லூரியில் கல்வி கற்ற விக்கும் லியனகே, 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்தார். விக்கும் லியனகே, தியத்தலாவ இலங்கை இராணுவ கல்விக் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ அகடமி ஆகியவற்றிலிருந்து தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்று, இரண்டாவது லுதினனாக கஜபா படைப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.
விக்கும் லியனகே, தனது 35 வருட புகழ்பெற்ற இராணுவப் பணியின் போது, 4ஆவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, படையணி கட்டளை அதிகாரி, கட்டளை அதிகாரி, பலசேனா, சேனாங்க, பாதுகாப்புப் படை கட்டளை பதவி உள்ளிட்ட பதவி நிலை பதவிகள் மற்றும் பல்வேறு ஆலோசகர் பதவிகளையும் வகித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் தொழில் பயிற்சி பாடநெறிகளைத் தொடர்ந்துள்ளார்.