தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ சார்பு அரசாங்கமென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தான் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெறுவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமென்கின்றபோதிலும் இதற்கான தீர்வை காண்பதற்குரிய மாற்று யோசனையை முன்வைக்க எவராலும் முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கின்றது. உலக சந்தையில் நிலவும் விலையை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. அத்துடன் போதுமானளவு டொலரும் எமது கையிருப்பில் இல்லை. எனவே மக்கள் பெரும் அழுத்தத்துக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். மக்கள் முகம் கொடுத்துவரும் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவையும் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.