தரமான சிறந்த தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்படுவதன் முக்கியத்துவம் மற்றும் ரசிகர்களுக்கு உயர்ந்த தரமான ரசனையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெகுசனஊடக அமைச்சின் கேட்போர்கூடத்தில் கடந்த 16 ஆம் திகதி ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்கள் பேரவைக்குமிடையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது தொலைக்காட்சி நாடகங்கள் தொடர்பில்  தேசிய கொள்கையை உருவாக்குதல், வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும்  வர்த்தக விளம்பரங்களுக்காக வரி அறவீடு செய்தல், 2023 -2032 காலப்பகுதியை சிறந்த தொலைக்காட்சி தசாப்தமாக உருவாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல், தொலைக்காட்சி நாடகத்துறையின் தொழில் தன்மையை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

தேசிய தனித்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கி படைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பான விடயங்களை ஊடகத்துறை அமைச்சர் இதன்போது முன்வைத்தார்.

இலங்கையின் தொலைக்காட்சித் துறை நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட, தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்கள் பேரவையின் தலைவர் சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன, அதன் செயலாளர் நாலன் மெண்டிஸ், சுரேஸ் அபேசேகர, பேராசிரியர் செனேஷ் திசாநாயக்க, நிரோஸன் இளேபெரும, சந்தன லியனகுணவர்தன, பந்துல வீரக் கொடி, ரவீந்திர குருகே, ஆனந்த அபேநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.