தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதில் அரசியல்வாதிகளை விட ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் பெரும் பங்காற்ற முடியும் எனவும், இது வரலாற்று ரீதியாக  நிரூபணமாகியுள்ளது என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 18 ஆம் திகதி யாழ்.மாவட்ட அரசாங்க வெளியீட்டுப் பணியகத்தை திறந்து வைத்ததன் பின்னர் யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு நாட்டின் மிக முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும் என்றார்.

ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் உரையாற்றுகையில்...

“தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு அரசியலை விட ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் முக்கிய பங்காற்ற முடியும்.  இது வரலாற்று ரீதியாக நிருபணமாகியுள்ளது.  ஜனநாயகத்தின் எல்லைக்குள் விமர்சனங்கள் இருக்கலாம், ஆர்ப்பாட்டாங்கள் இருக்கலாம், வாதப் பிரதிவாதங்கள் இருக்கலாம், இவற்றை ஜனநாயகத்தின் பண்புகளாக குறிப்பிடலாம்.  அது ஒரு போதும் உங்களுக்கு இடையேயான நட்பு தடையாக இருக்கக் கூடாது.  ஒரு நாடு முன்னேறுவதற்கு மோதல் அவசியம் இ ஆனால் மோதல் இறுதியில் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.

சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட ஊடகவியலாளர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர் எவ்வாறு சிந்திக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக எதிர்காலத்தில் ஊடக பரிமாற்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். மேலும், யாழ்ப்பாணம் மிகவும் மேம்பட்ட ஊடகப் பாவனையைக் கொண்ட ஒரு இடம். ஏன் தெரியுமா? இந்தப் பகுதியில் ஐந்து பிராந்திய அச்சு ஊடகங்கள் உள்ளன. இலங்கையில் வேறு எங்கும் இப்படி ஒரு இடம் இல்லை.  அவ்வாறே, பேச்சு சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். ஊடகங்களை கடுமையான விதிகளால் கட்டுப்படுத்த முடியும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. அதற்கு சுய கட்டுப்பாடு தேவை. அது நமக்குள் இருக்க வேண்டும். "

ஊடகவியலாளர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசிதிசி காப்புறுதி,  இலங்கையில் முதலாவது பட்டய ஊடகவியலாளர் நிறுவகத்தை ஸ்தாபித்தல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுகள் தொடர்பிலும் அமைச்சர் விளக்கமளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேஸ் ராகவன், வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம் . சமன் பந்துலசேனஇ அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் மகேசன் உட்பட அரச அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.