நவீன தொழிநுட்பத்துடன் கூடிய வினைத்திறனுள்ள மேம்பட்ட தபால் சேவையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் 25ஆம் திகதி நடைபெற்றது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சமகி ஜன பலவேக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் சேவைக் கட்சி  போன்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல சுயாதீன தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

இங்கு பிரதானமாக பல விடயங்கள் பற்றி அவதானம் செலுத்தப்பட்டதுடன், தபால் மா அதிபர் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியதன் பின்னர் உரிய ஆட்சேர்ப்புகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

 

தனியார் தபால் சேவையின் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்கின்ற போது பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தும் நிறுவனமொன்றினை ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், தேவையான பத்திரங்களை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 

தபால் திணைக்களத்தின் வருவாயை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரதேச தபால் பிரிவிற்கும் ஒருவர் என்ற அடிப்படையில்,  புதிதாக  சேர்த்துக் கொள்ளப்பட்ட இணைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு சந்தைப்படுத்தல் பயிற்சியளித்து அதன் மூலம் தபால் சேவையின் வருவாயை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் மா அதிபர் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

 

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ருவன் சத்குமார, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.