தீகவாபி சைத்தியவின் புனரமைப்புக்காக நிதி திரட்டும் “தீகவாபிய அருண” நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் இன்று (12) முற்பகல் கொழும்பு 07 இல் உள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புனித இடங்களில் ஒன்றான தீகவாபி நாட்டின் நான்காவது பெரிய தாகபையை கொண்டுள்ளது. புத்தரின் புனித சின்னம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மன்னர் சத்தாதிஸ்ஸவினால் இந்த சைத்திய நிர்மாணிக்கப்பட்டது.

தீகவாபி விகாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய மஹஓய சோபித தேரரின் வேண்டுகோளின் பேரில் சைத்தியவின் புனரமைப்பு திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு திறைசேரியிலிருந்து எவ்வித நிதியும் செலவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்கள் இதற்கு நிதி ரீதியாகவும் உடல் உழைப்பின் மூலமும் பங்களிக்க முடியும்.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டார். சியம் மகா நிகாயவின் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி அனுநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்தனர்.

‘யலி தக்கிமு தீகவாபிய’ என்ற இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

‘தீகவாபிய அருண’ திட்டத்திற்கு முதலாவது பங்களிப்பை செய்த நா உயன ஆரண்ய சேனாசனாதிபதி சங்கைக்குரிய அங்குல்மடுவே அரியனந்த தேரர் அன்பளிப்பு செய்த ரூ .100 மில்லியனுக்கான காசோலையை நிர்வாக சபை உறுப்பினர் திரு. சந்திரகீர்த்தி பண்டார ஜனாதிபதி அவர்களிடம் வழங்கினார்.

பௌத்தயா தொலைக்காட்சி சேவை ரூ. 5 மில்லியன் ரூபாவையும், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையணி, இலங்கை வங்கி, மகரகம புற்றுநோய் வைத்தியசாலை மற்றும்  சென்ட்ரல் பெயாரிங் தலைவர் சுதத் தென்னகோன் ஆகியோர் தங்கள் நன்கொடைகளை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கினர்.

தீகவாபி சைத்தியவின் புனரமைப்புடன் இணைந்ததாக புனித பூமிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதியளிக்கும் நான்கு மண்டபங்கள் மற்றும் 20 அறைகள் கொண்ட ஓய்வு இல்லம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ராமண்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல நாயக்க தேரர், அமரபுர சூலகண்டி பீடத்தின் மகாநாயக்க தேரர்  சங்கைக்குரிய கன்துனே அஸ்ஸஜி தேரர், மிரிசவெட்டிய விகாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக தேரர், தொல்பொருள் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் தலைமையிலான மூன்று நிகாயக்களினதும் மகா சங்கத்தினர், அமைச்சர் சரத் வீரசேக்கர, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் முப்படைகளின் தளபதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.