ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய  கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தேரர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (26) முற்பகல் கல்கிஸ்ஸ தர்மபாலராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், நாயக்க தேரர் அவர்களை சந்தித்து அவருக்கு நோய் நொடியில்லாத ஆரோக்கிய வாழ்வுக்காக பிரார்த்தித்தார்.

மகா நாயக்க தேரரை ஆசீர்வதிப்பதற்காக ஐம்பது மகா சங்கத்தினர் கலந்து கொண்ட ஒரு அன்னதான நிகழ்விலும் பங்கேற்ற ஜனாதிபதி அவர்கள், தேரர்களுக்கு அன்னதானங்களை வழங்கினார்.

சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையையும் ஜனாதிபதி அவர்கள் தேரரிடம் வழங்கினார்.

ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயவின் பதில் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய  கங்துனே அஸ்ஸஜீ தேரர், கோட்டே ஸ்ரீ கல்யானி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின்  மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஸ்ரீ லங்கா ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல தேரர், அமரபுர ஸ்ரீ தர்மரக்ஷித நிகாயவின் மகாநாயக்க தேரர், பம்பலபிட்டிய வஜிரராமாதிபதி சங்கைக்குரிய திரிகுணாமலயே ஆனந்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாரஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண தலைமை சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரின் பிறந்த நாளும் இன்றாகும்.

இன்று (26) பிற்பகல் அந்த விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் அவர்களை சந்தித்து அவருக்கு நோய் நொடியில்லாத ஆரோக்கிய வாழ்வுக்காக பிரார்த்தித்தார்.

தேரர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்வு மற்றும் அப்பகுதி வாழ் மக்களுக்கு அன்பளிப்பதற்காக சேகரிக்கப்பட்டிருந்த பொருட்களையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.