தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டு இருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியார்களுடனான சந்திப்பு zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவர்களது சம்பள பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாக கம்பனிகள் இதற்கான கூட்டு ஒப்பந்த காலத்தை 4 வருடங்களாக நீடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும் கூறினார்.

இதேவேளை உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட தொழில் சங்கங்கள் 2 வருடங்களுக்கு வரையறுக்க வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளன. சம்பள பிரச்சினையில் எதிர்நோக்கப்பட்டுள்ள இந்த விடயங்களுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படுகின்றது.

அதேவேளை தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் உறுதிப்பட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. சம்பள நிர்ணய சபையின் ஊடாக இதனை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சரவையில் நேற்று விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

03. தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளக் கொடுப்பனவை அதிகரித்தல்

'2019-2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்' ஏற்பாடுகளுக்கமைய 50/- ரூபா நிலையான விலைக் கொடுப்பனவு உள்ளிட்ட 750/- ரூபா நாளாந்த சம்பளமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் நியம கிலோகிராம் அளவு அதிகரிக்குமாயின் 'Over Kilo Rate' எனும் பெயரில் மேலுமொரு கொடுப்பனவுடன் சேர்த்து தோட்டத்தொழிலாளர்கள் தற்போது சம்பளமாகப் பெற்று வருகின்றனர்.

2020 நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்தச் சம்பளமாக 1000/- ரூபா வழங்குவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக '2019 – 2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில்' கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும், குறித்த கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினரான பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை முதலாளிமார் சம்மேளனம் நாளாந்த சம்பளத்தை 920/- ரூபா வரை அதிகரிப்பதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பளக் கட்டுப்பாட்டு சபை மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000ஃ- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.