கெரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் “வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளும் முறைமையை“ மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேல் மாகாணம் மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2020 ஏப்ரல் முதல் மே வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வீட்டிலிருந்து வேலை முறைமை“ மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களை பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை வழங்குவதற்கு மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றுநிருபம் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர அவர்களினால் நேற்று (29) அனைத்து அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் பொது முகாமையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் காரணமாக பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இது குறிப்பாக நடைமுறையாகும். இம்மாவட்டங்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இடர் வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமைந்துள்ள அரச நிறுவனங்கள் கடுமையான சுகாதார சட்ட திட்டங்களின் கீழ் வழமை போன்று நடைபெற வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமது விடயத் துறையின் கீழ் வரும் அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு நிறுவனத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கடப்பாடுடையவர்கள் என ஜனாதிபதியின் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நிறுவனமும் தொலைவிலிருந்து மேற்கொள்ளக்கூடிய பணிகள் மற்றும் வீடுகளில் இருந்து சேவைகளை மேற்கொள்ளக்கூடிய ஊழியர்களை தீரமானிக்கும் அதிகாரம் நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் குறித்த கோப்புகள் மற்றும் உபகரணங்களை உரிய அனுமதியுடன் ஊழியர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட வேண்டும். வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளும் நேரம் காலை 8.30 முதல் மாலை மாலை 4.15 மணி வரையாகும். ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பகளின் போது தேவைக்கு ஏற்ப அதனை மாற்றுவதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும். “வீடுகளில் இருந்து வேலை“ திட்டத்திற்கு உட்படாத ஊழியர்களை மேலதிக மனித வளம் தேவையான நிறுவனங்களுக்கு சேவையில் ஈடுபடுத்த முடியும்.
“வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை“ செயற்திறனாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்காக மாற்று தொடர்பாடல் ஊடகங்களை பயன்படுத்துமாறு சுற்றுநிருபத்தின் மூலம் நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குருந் தகவல்கள், மின்னஞ்சல், தொலைபேசி, பயனாளர்களுக்கு வசதியான செயலிகளான வட்ஸ்எப், ஸ்கைப் இதற்காக பயன்படுத்த முடியும். வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு தேவையன நிதி ஏற்பாடுகளை வழங்குவது கணக்குக் கொடுக்கும் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
பொதுமக்கள் தமது கோரிக்கைகளை தாமதமின்றி முன்வைக்கக் கூடிய வகையில் பொது மக்களுக்கு நேரடி சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் ஒரு இணைய வழித் தளத்தை (Online Platform) உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய தனிமைப்படுத்தலில் உள்ள ஊழியர்களிடம் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்பதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளது. எனினும் சிறிதளவேனும் கொரோனா நோய் அறிகுறிகளை கொண்ட ஊழியர்களிடம் எந்த பணியையும் ஒப்படைக்க முடியாது.
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் மூலம் நிருவாகம், கல்வி மற்றும் உயர் கல்வி, நலன் பேணல் சேவை வழங்கள், சட்டவாக்க நிறுவனங்கள் மற்றும் பொது தொழில்முயற்சி மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளுக்கு விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்காக கல்வி தொலைகாட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் ஆரம்பித்தல், இலத்திரனியல் ஊடகங்களின் வாயிலாக கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை ஒலிபரப்புதல், நலன் பேணல் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல், அங்கவீனம் மற்றும் படுக்கையில் உள்ள நோயாளிகள் உள்ள வீடுகளுக்கு தேவையான சேவைகளை வழங்குவதும் இதில் உள்ளடங்கும்.
அனைத்து அரச நிறுவனங்களும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள ஒழுங்குகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நியமங்களை பின்பற்றுவதற்கான “ முன்மாதிரி சூழலாக“ ஒவ்வொரு பணியிடங்களையும் பேணுமாறும் இச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுகங்களுடன் தொடர்பு பட்ட பணிகள், சுங்கம், நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் எவ்வித குறைவுமின்றி தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்றும் சுற்று நிருபத்தின் மூலம் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.