- வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்கு பிரச்சார நிகழ்ச்சித்திட்டம்...
- உள்நாட்டு வர்த்தகர்கள் சர்வதேச சந்தைக்கு..
- வீழ்ச்சியடைந்துள்ள நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நிவாரணம்...
- பங்குச் சந்தையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை...
முதலீட்டாளர்களை இனங்கண்டு நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக திட்டமிடப்பட்டுள்ள புத்தாக்க உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பிரதிபலனாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு புத்தாக்க உற்பத்திகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் அதிகமான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும், புத்தாக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
நிதி மற்றும் மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி சீர்திருத்த இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (23) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
வட்டி வீதம்இ நிதிப் பிரிவு மற்றும் பங்குச்சந்தை நிலை மகிழ்ச்சிகரமானதாக உள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், 10 முதன்மையான விடயங்களை இனங்கண்டு துரித பொருளாதார அபிவிருத்திக்கு வழியேற்படுத்துதல் தனது அமைச்சின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது முதலீட்டாளர்களை கவரக்கூடிய பின்புலம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. உரிய பிரச்சார உத்திகளைக் கையாள்வதின் மூலமும் தூதுவர்களின் ஒத்துழைப்புடன் முதலீட்டாளர்களை வரவழைக்க திட்டமிட வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
முதலீட்டு வாய்ப்புக்களை இனங்கண்டு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான அனுமதிகளை தயார்படுத்துவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
சர்வதேச வர்த்தகர்களுக்காக கொழும்பு நகரை மையப்படுத்திய வகையில் அலுவலகம் ஒன்றை தாபித்தல் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.
அரச நிறுவனங்கள் கிராமங்களுக்கு செல்வதன் முக்கியத்துவத்தையும், வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சீமெந்து மற்றும் இரும்பின் விலைகளை குறைப்பதற்குள்ள இயலுமை தொடர்பாக கண்டறிவதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள் அதன் மூலம் நிர்மாணத் துறையின் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
2015 க்கு முன்னர் நாட்டில் இருந்த அபிவிருத்தி சூழலை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தென்னந்தோட்டங்களை துண்டாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பாரிய அளவிலான 289 திட்டங்கள் நாட்டில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை உடனடியாக நிறைவு செய்யுமாறு கூறிய பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் பாதைகள்இ நீர் வழங்கல் திட்டங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைகளை தாமதிக்காது நிறைவு செய்வதன் மூலம் நிர்மாணத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.
இளைஞர் சமுதாயம் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களை திட்டமிடுவதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சிங்கள மொழி பயன்பாட்டின் மூலமும் உரிய தெளிவுபடுத்தல்கள் மூலமும் உள்நாட்டு வர்த்தகர்களை இலகுவாக பங்குச்சந்தையை நோக்கி வரச்செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
வீழ்ச்சியடைந்துள்ள தனியார் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு இயன்றளவு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி குறித்த நிறுவனங்களின் சொத்துக்களை இனங்கண்டு வைப்பாளர்களுக்கு நீதியை வழங்குமாறும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சு மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள்இ துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.