இலங்கையில் பொது நீர்நிலை முகாமைத்துவ அணுகுமுறையை செயல்படுத்துவதற்கு ஒரு மூலோபாய பொறிமுறையை வகுப்பதற்கான குழுவொன்றை நியமிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான சந்திப்பொன்று பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் 2020.09.21 இடம்பெற்றது.
நீர்வழங்கல் துறை அமைச்சு, நீர்ப்பாசனத்துறை அமைச்சு, கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு, மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட 15 நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பான நீர் தேவையை பூர்த்திசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இக்குழு எதிர்வரும் வாரமளவில் நியமிக்கப்படவுள்ளது.
திறமையான மற்றும் நியாயமான தேசிய நீர்வள பாதுகாப்பு மற்றும் ஒதுக்கீடுகளின் மூலம் சமூகத்தினது மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதே இக்குழுவை நியமிப்பதன் முதன்மையான நோக்கமாகும்.
நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள கொள்கையை மீள்பரிசீலனை செய்தல், முக்கிய வரி நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்குதல், எல்லாவற்றிற்கும் மேலாக போதுமான தரமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், தற்போதுள்ள நீர்வள மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் நீர்நிலை முகாமைத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை பலப்படுத்துதல், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு மற்றும் நிர்வாகத்தை ஊக்குவித்தல் என்பன இதன் பிற நோக்கங்களாகும்.
மேலும், நிலவும் நீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொறுப்புள்ள மற்றும் அதிகாரம் கொண்ட பொது பொறிமுறையொன்றை நிறுவுதல், நீர் வளங்களை பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் முரண்பாடுகளை தணித்தல் மற்றும் நீருடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு பதிலளித்தல், நீர் வழங்கல் முகாமைத்துவ பிரச்சினைகளை வெற்றிகரமாக கையாள்வதற்கு பொறிமுறையொன்றை நிறுவுதல், தேசிய நீர் வளங்கள் முகாமைத்துவ செயலாளர் அலுவலகமொன்றை உருவாக்குதல், நீர்நிலைகள் உள்ள பிரதேசங்களை பாதுகாத்தல், நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துதல், குழாய் கிணறுகள் முறைகேடான முறையில் நிர்மாணிக்கப்படுவதால் அதற்கான முறையான வேலைத்திட்டங்களையும், ஒழுங்குமுறைகளையும் நிறுவுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.
வீட்டுத்திட்டங்களில் வசிக்கும் மக்கள் முகங்கொடுக்கும் நீர் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அந்த வீட்டுத்திட்டங்களில் முறையான நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் இல்லையென சுட்டிக்காட்டினார்.
ஒழுங்கற்ற கட்டுமானங்கள் மூலம் நிலத்தில் நீர் உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளமை வெள்ளம் ஏற்படுவதற்கு பிரதான காரணமாகியிருப்பதாகவும், சட்டவிரோத கட்டுமானங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேல் மாகாணத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்படும் நட்டம் 300 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். ஒழுங்கற்ற கட்டுமானங்களே அதற்கு காரணமாகும். இந்நாட்டில் நீர் தட்டுப்பாடு இல்லாததுடன், மொத்த நீரில் 50 சதவீதம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கடலில் சேர்க்கப்படுகின்றன என்றும் சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
முறையான நீர் முகாமைத்துவம் இன்மை காரணமாக ஏற்படும் இந்த பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வதற்கு எதிர்வரும் வாரத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய குழு மாதம் ஒரு முறை ஒன்றுகூடவுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் முன்னெடுக்கப்படும் திட்ட முன்மொழிவுகள், கணக்கெடுப்பு அறிக்கைகள் என்பவற்றை இக்குழுவில் சமர்ப்பித்து நீர் பிரச்சினையை குறைப்பதற்கு உடனடி தீர்வுகளை பெறுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.