முதலாவது சந்திப்பு ஹல்துமுல்லையில் : பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு

மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளை தான் நேரடியாகக் கண்டு அவர்களின் கவலைகளை கேட்டு சரியான தெளிவொன்றை பெற்று நிவாரணங்களை வழங்குவது அவரின் எதிர்பார்ப்பாகும்.

முதல் விஜயமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு ஹப்புத்தளை 100 ஏக்கர் கிராமத்தில், குமாரதென்ன பாடசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

கிராமிய மக்கள், நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாத பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளினால் அல்லல்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் மேற்கொண்ட விஜயங்களின்போது அது தெளிவாகியதாகவும் குறிப்பிட்டார். வாழ்வாதார பிரச்சினை, காணி மற்றும் வீடின்மை, காணிகளுக்கு உறுதிகள் இல்லாதிருத்தல், சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகள் போதுமானதாக இல்லாமை, பிள்ளைகளின் கல்வி பிரச்சினைகள் மற்றும் பாடசாலையின் குறைபாடுகள், விவசாய மற்றும் குடிநீருக்கான நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினை, காட்டு யானைகள் ஊருக்குள் வருதல், விவசாய உற்பத்திகளை விற்க முடியாமை அவ்வாறு இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் முதன்மையானவையாகும்.

கிராமிய மக்களுக்கு உள்ள கஷ்டங்களை புரிந்துகொண்டு, அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அரச நிறுவனங்களின் ஊதாசீனம் மற்றும் செயற்திறனின்மை போன்றவை பிரிதொரு பிரச்சினையாகும்.

ஜனாதிபதி அவர்கள் மிக முக்கிய கிராமங்களில் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும்போது மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். செலவழிக்கப்படும் பணம் குறைத்துக்கொள்ளப்படும். கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதேச அதிகாரிகள் மாத்திரம் பங்குபற்றுவர். மக்கள் சந்திப்புக்கு வருகை தந்து, தமக்குள்ள பிரச்சினைகளை அறியத்தருமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முடியுமான வகையில் உடனடியாக தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும். தீர்ப்பதற்கு காலம் எடுக்கக்கூடிய பிரச்சினைகள் மாத்திரம் பின்னர் தீர்த்து வைப்பதற்காக குறித்துக்கொள்ளப்படும்.

வேள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பது ஹல்துமுல்லை பிரதேச செயலக பிரிவின் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளாகும். அதில் 222 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது. நெல், மிளகு மற்றும் கறுவா பயிர்ச் செய்கையுடன்கூடிய கலப்பு விவசாயம் ஆகும். மக்கள் சந்திப்பு இடம்பெறும் குமாரதென்ன பாடசாலையில் 17 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.