மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மற்றும் நிருவாக நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மாவட்ட செயலத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டத்திற்கு அவசியமாகவும் அவசரமாகவும் நிறைவேற்றப்படவேண்டிய வேலைகளை தொடர்பாக விரிவாக விளக்கமளித்ததுடன் கோரிக்கைகளையும் முன்மொழிந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்தட்டுப்பட்டை நீக்குவதற்கு கித்துள் உறுகாமம் இரண்டு குளங்களையும் இணைப்புசெய்து அதன் நீர்மட்டத்தினை 90 எம்.சி.எம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், ஏற்கனவே 55 எம்.சி.எம் உயரத்தில் உள்ள அணைக்கட்டுகளை உலக வங்கியின் நிதியில் 58 எம்.சி.எம் வரைதான் உயர்த்துவதாக தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை 90 எம்.சி.எம் மாக உயர்த்துவதாயின் மாத்திரம் இத்திட்டத்தினை முன்னெடுக்கும்படி விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் உள்ளன. எனவே இதனை உடனடியாக முன்னெடுக்கும்போது மாவட்டத்தில் ஏற்படுகின்ற நீர்த்தட்டுபாட்டையும் வெள்ள அனர்தத்தையும் கட்டுப்படுத்தலாம் என்ற ஆலோசனையினையும் முன்வைத்தார்.

கழுதாவளைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை செயல்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதுடன் விவசாயிகளின் விவசாய உற்ப்பத்திகளுக்கு நியாய விலையினையும் பெற்றுக்கொடுக்கமுடியும் என மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையானது கிழக்கு மாகாணத்திற்கான ஒரேயொரு பெரியவைத்திய சாலையானதாகும். இங்கு நிலவுகின்ற குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள புற்நோய் சிகிச்சைப் பிரிவானது எல்லா வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தும் அதனை இயக்குவதில் பெரிய இழுத்தடிப்பு இடம்பெற்றுவருவது தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் இங்கு சீ.ரி. இஸ்கேன் இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளதுடன், எம்.ஆர்.ஐ. இயந்திரம் இல்லாமலும் காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் அம்பாறை மற்றும் கண்டி, கொழும்பு போன்ற இடங்களுக்கு இப்பரிசோதனைகளுக்கான மாற்றப்படுகின்றனர். எனவே இவற்றுக்காக புதிய நவீனரக இயந்திரங்களையும் அதற்கான பயிற்றப்பட்ட நிரந்தர விசேட நிபுனர்களையும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன் எடுக்கப்படவேண்டும் எனவும் கோரப்பட்டது.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன கிளையை (ஒசுசல) மட்டக்களப்பு நகரத்தில் அமைப்பதற்கு பலதடவைகள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் அது கைகூடவில்லை. அது போன்று சதொச விற்பனை நிலையம் மட்டக்களப்பு நகருக்கு அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதனுடாக எமது மக்கள் நியாய விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய ஏதுவாக அமையும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

உன்னிச்சை குளத்தில் இருக்கின்ற நீர் மட்டக்களப்பு நகர்ப்பகுதி மற்று ஏனை புறநகருக்கெல்லாம் வழங்கப்படுகின்ற நிலையில் உன்னிச்சையை அன்மித்த பல பகுதிகளுக்கும் நீர் தட்டுப்பாடுள்ள பகுதிகளுக்கும் கிடைக்காமல் இருப்பது பாரியகுறையாகவே கானப்படுகின்றது என்பது அவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமானது தனியார் காணிகளிலும் பாடசாலை கட்டிடத்திலும் அமைந்துள்ளன. இராணுவ முகாம் அமைப்பதற்கான காணிகள் புன்னக்குடாவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீள் குடியேற்ற அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்தியக்காரியாலையம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதேச காரியாலையம் ஒன்றை மட்டக்களப்பில் அமைப்பதன் ஊடாக மட்டக்களப்பு விவசாயிகள் தங்களின் நெல்லை வழங்குவதற்கு வசதியாக அமையும் எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இக்குறைபாடுகளை உரிய அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு மிக விரைவில் இவற்றுக்கான தீர்வுகளை மக்களுக்காக முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

6986cf9ad43446411c85715627bcb4c8 XL