இளம் மருத்துவர்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு
- பதவிக்காலத்திற்குள் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதாக உறுதி
- கிராமிய மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்கு புதிய உத்திகள்
மத்திய சுகாதார சேவைக் கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை கொவிட் – 19 நோய்த் தொற்று எமக்கு கற்றுத் தந்துள்ளது. நாம் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இலங்கையில் பல்வேறு வைத்தியசாலைகள் மாகாண சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் சுகாதார பிரச்சினைகளின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் நாடு முழுவதும் பல்வேறு வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. சுகாதார சேவை முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் கொவிட் -19 நோய்த் தொற்றுக்கு இலங்கை முகங்கொடுக்கும் போது அதன் செயற்திறன் இதற்கு மாற்றமாக அமைந்திருக்கலாம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஒரு சில நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து பொறுப்பை செயற்படுத்தும் முக்கியத்துவம் எமது அண்மைக்கால அனுபவங்களின் மூலம் உறுதி செய்யப்படுவதோடு, கல்வி இதுபோன்ற இனங்காணக்கூடிய இன்னுமொரு துறையாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
களனி பொல்லேகல, மானெல்வத்த நாகானந்த சர்வதேச பௌத்த கல்வி நிலையத்தில் (05) “சிறந்த உள்வாரி வதிவிடவாளர்” (Good Intern Programme 2020) பயிற்சி பட்டறையில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இக்கருத்துக்களை தெரிவித்தார்.