- வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு
- இலஞ்சம் வழங்கினால் தொழில் நிராகரிப்பு
- 10 வருட தொடர் சேவையை நிறைவு செய்வோருக்கு ஓய்வூதியம்

வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை செப்டெம்பர் 02ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது.

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு:

  • எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும் பயற்சி பெறாதவர்களும்.
  • விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்கு குறைவாகவும் 45 ஐ விட அதிகமாகவும் இல்லாது இருத்தல்.
  • சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல்.
  • வயது முதிர்ந்த, நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தில் உறுப்பினராக இருத்தல்.
  • விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் நிலையான வசிப்பிடத்தை கொண்டவர்.

பயிற்சிக்காக தெரிவு செய்தல்:

  • ஒரு குடும்பத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒரு விண்ணப்பதாரி மாத்திரம் கவனத்தில் எடுக்கப்படும்.
  • விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசங்களில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விண்ணப்பதாரி கேட்டுள்ள பயிற்சி துறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, குறித்த தொழில் பயிற்சிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
  • தாம் வசித்துவரும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்கப்படும்.
  • சிறப்பான பயற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அருகில் உள்ள பிரதேசத்தில் தொழில் வழங்கப்படும்.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்:
6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப திறன் சாரா சம்பளம் (PL-I) (35,000) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு.

10 வருட கால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும்.

குறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு, தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.