பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட ஆலோசனைகளைப் பெற்று வைப்பாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி அலுவலகம், மத்திய வங்கி, திறைசேரி மற்றும் வைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றை அமைத்து எதிர்கால செயற்பாடுகளை கண்காணிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ETI மற்றும் த பினான்ஸ் வைப்பாளர்களுக்கு நிதியை மீள வழங்கும் வழிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ETI நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி இந்நிறுவனங்கள் தொடர்பாக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவ்விரு நிறுவனங்களிலும் 06 இலட்சத்திற்கும் குறைவான பெறுமதியுடைய வைப்புகளை கொண்டுள்ளவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும். இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் கையகப்படுத்தியேனும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அடுத்த நிதிச்சபைக் கூட்டத்தின்போது மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை ஆராய்ந்து அதிகபட்ச தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் உறுதியளித்தார்.

மத்திய வங்கியின் குறைபாடுகளை சரிசெய்து மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நிறுவனத்தின் கௌரவத்தையும் பொறுப்பையும் உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து வழக்கு தொடராது அதனை கையகப்படுத்தி மக்களுக்கு சொந்தமான நிதியை மீளளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நிதி நிறுவனங்களுக்கு கடனை செலுத்துவதிலிருந்து விலகிக்கொள்பவர்களுக்கு எதிராகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இரு நிறுவனங்களினதும் வைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.