மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்;க்கும் வகையில் வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்;திட்டம் ஆரம்பம்
Ø விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை
Ø அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்க முறையான பொறிமுறை
Ø தட்டுப்பாடின்றி மீன், முட்டை மற்றும் கோழி இறைச்சி
Ø கூட்டுறவு சங்கமும் சுப்பர் மார்க்கட்டுகளும் இணைந்து உணவுப் பொருட்கள் விநியோகம்
Ø நோயாளிகளுக்கு மருந்துப்பொருட்களை விநியோகிக்க விசேட நிகழ்ச்சித்திட்டம்
Ø அனைத்துப் பிரதேசங்களிலும் 24 மணி நேரம் திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையம்
Ø வர்த்தக வங்கிகள் அத்தியாவசிய சேவைப் பிரிவிற்குள்
நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடிகள் இணைந்து பிரதேச பொறிமுறையொன்றின் மூலம் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல், நெறிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
அனைத்து நடைமுறைகளும் கொரோனா ஒழிப்புக்கு சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டும். மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை பேணுவது முக்கியமானதாகும். விவசாயிகள்,தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள்,வங்கித் தலைவர்கள்,அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் தொடர்புபட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டதாக பசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
அரிசி,தேங்காய்,மரக்கறி,முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்கக் கூடிய நிலை உள்ளது. இவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய முறையில் கொள்வனவு செய்து கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடி விற்பனை நிலையங்களுடன் இணைந்து அத்தியாவசிய உணவுப் பொதியொன்றினை தயார் செய்து பிரதேச பொறிமுறையின் மூலம் முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார். அவற்றை அந்தந்த மக்கள் பிரிவினர் எதிர்பார்க்கும் வகையில் பல்வேறு விலைகளில் தயாரித்து வழங்க முடியும். இந்த நடைமுறையை நெறிப்படுத்துவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியும் பெறப்படும்.
அரசாங்க வைத்தியசாலைகளில் பதிவுசெய்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு உரிய மருந்து பட்டியல்களின் படி வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பங்களிப்பு இதற்கு பெற்றுக்கொள்ளப்படும்.
தனியார் பாமசிகளில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு பிரதேசத்தில் தெரிவுசெய்த சில பாமசிகளின் மூலம் வீடுகளுக்கே பகிர்ந்தளிக்கும் முறைமையொன்றை பின்பற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வர்த்தக மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் வகையில் வர்த்தக வங்கிகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவற்றின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி ஓடர்கள் மூலம் வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பசில் ராஜபக்ஷ அவர்கள் அந்நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
முழு திட்டத்தினதும் நோக்கம் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு சுகாதார துறை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதாகும்.
பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள்,சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பங்களிப்பு பெறப்படும். தற்போது பல்வேறு நாடுகள் முழுமையாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உருவாகியுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அதிக கவனம் செலுத்தி நிலையான உற்பத்தி பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
விவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மரக்கறி,நெல்,சோளம்,உழுந்து,பாசிப்பயறு,கௌபி,குரக்கன் பயிரிடுவதற்கு விவசாயிகளை வலுவூட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ,பன்துல குணவர்த்தன,டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர,நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆட்டிகல ஆகியேரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
மொஹான் சமரநாயக்க
பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு