தேசிய பொறுப்பாக கருதி கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் உதவி தேவையானதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
சீனாவின் வூஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவது ஆரம்பமானது முதல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் முறையாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் செயற்பட்டதன் மூலம் நோய்த்தொற்றை தவிர்க்கக்கூடியதாக இருந்தது. தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நோய்த் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரதும் முழுமையான உதவி தேவையாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் சம்பந்தமாக இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் நேற்று (10) பிற்பகல் இனங்காணப்பட்டுள்ளார். 52 வயதுடைய அவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டவராவார். இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அவர் சேவையினை வழங்கியுள்ளார். அந்த நோயாளர் தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டிருப்பதுடன், அவருக்குத் தேவையான சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர் ஹபரனை மற்றும் திக்வல்லை பிரதேசங்களில் இரண்டு குழுக்களுடன் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த இடங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இரண்டு நிலையங்களில் 685 பேர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மிகவும் குறுகிய காலத்தில் அவர்களுக்கு வழங்க முடியுமான அதிகபட்ச வசதிகளை தயார்படுத்துவதற்கு இராணுவத்தினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்ததாக இராணுவ பணிக்குழாம் பிரதானி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். ஹெந்தலை மற்றும் தியத்தலாவை மத்திய நிலையங்களும் நோய்த் தடுப்புக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன.
தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் இருந்து வருகை தரும் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் 14 நாட்கள் நோய்த் தடுப்புக்காக இந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஏனைய வசதிகளையும் முடியுமானளவு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோய்த் தடுப்பின் பின்னர் அது பற்றிய சான்றிதழ் ஒன்றை வழங்கவும் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் on arrival வீசா வசதியை மீண்டும் அறிவிக்கும் வரை இடை நிறுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வேறு நாடுகளிலிருந்து வருவோர் வீடுகளிலிருந்து நோய்த் தடுப்பில் ஈடுபடுவதன் மூலம் இதற்கு பங்களிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
குழுக்களாக வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பற்றாக்குறையின்றி மருந்து வகைகளை தயார்படுத்தி வைத்தல், பரிசோதனை நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை முறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.03.11