நாட்டின் பல்கலைக்கழகத்திற்கு அமைவாக அமைக்கப்படும் முதலாவது பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஹோமாகம - பிட்டிபனவில் எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இனோடெக் 2020 தொழில்நுட்ப கண்காட்சி ஹோமாகம – பிட்டிபன நகரில் இன்று(11) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை திறந்திருக்கும். இதனை இலவசமாக பார்வையிட முடியும்.
ஹோமாகம – பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நனோ தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் உள்ளிட்டவற்றின் கண்காட்சி 300 ஏக்கர் நிலப்பரப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை ஆய்வு மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை இந்த கண்காட்சியில் காணமுடியும்.
புதிய கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தும் நோக்கில் 400 பாடசாலைகள், 15 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வுகள் மூலமும் தயாரிக்கப்பட்ட 1500 புதிய கண்டுபிடிப்புக்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.