நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
விசேடமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்படும் இந்த குறைந்த வட்டியிலான கடன் தொகையின் எல்லையை அதிகரிக்குமாறு பல்வேறு தரப்புகளும் நிதியமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. 6 மாவட்ட செயலகங்கள் ஊடாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இதனை மேலும் ஒழுங்குபடுத்துவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.
குறிப்பாக வடமாகாணத்திற்கென 292 மில்லியன் ரூபாவையும், வடமத்திய மாகாணத்திற்காக 250 மில்லியன் ரூபாவையும் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்தில், நுண்நிதி கடன் நெருக்கடியினால் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ள இந்தத் தீர்மானம் காரணமாக, மேலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கடன் பெறுவதற்கு தகுதிபெறவுள்ளனர். இது தவிர வருடாந்த வட்டி வீதத்தை 14 சதவீதத்திலிருந்து 9 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தின் முன்னேற்ற அறிக்கையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறைசேரிக்கு அனுப்புவதற்காக மாவட்ட நடவடிக்கைக் குழுவொன்றும் அமைக்கப்படும். கிராமிய மக்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் பொறுப்பு இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.