கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச மருத்துவ முறைகள் பற்றி அத்துறையிலுள்ள நிபுணர்களை அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபாக்ஷ சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார, வெளிவிவகார, சுற்றுலா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுடைய முதலாவது நோயாளி தற்போது நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளார். வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு வைத்தியர்களால் முடிந்துள்ளது. முழுமையான அர்ப்பணிப்புடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறைகளையும் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார். மக்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கும் சீனாவிலிருந்து மாணவர்கள் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் விசேட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

சீனாவின் வூகான் நகரிலிருந்து நாட்டுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக வழங்கி அவர்களை கவனித்துக்கொள்ளுமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி சுற்றுலாத்துறையை பாதுகாத்து தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கக்கூடிய நடவடிக்கைகளை பற்றி கவனம் செலுத்தினார்.

நோய் பரிசோதனைக்காகவும் வைத்தியசாலைகளுக்கான வசதிகளையும் முடியுமானளவு விரிவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் பவித்ரா வண்ணியாரச்சி ஆகியோரும் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.