வீழ்ச்சி அடைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு துரிதமான நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பங்களிப்பு செய்யவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குத் தரகர்களுடன் நேற்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கடந்த 4 அரை வருட காலப்பகுதியில் கொழும்பு பங்குச் சந்தை பாரிய பின்னடைவுக்குள்ளானது. இதன் காரணமாக பங்கு சந்தை தரகர்களின் நிறுவனங்கள் பல மூடப்பட்டன, இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றிய பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்திருப்பதாகுவும் கொழும்பு பங்குச் சந்தையுடன் தொடர்புபட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலின் போது பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.

கொழும்பு பங்குச்சந்தை பரிமாற்றத்தை துரிதப்படுத்துவதற்காக வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளை கொழும்பு பங்கு சந்தையில் முதலீட்டுக்காக பயன்படுத்தப்படவேண்டும் என்றும் பங்குச் சந்தை தரகர்கள் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டின.

கடந்த 4 அரை வருட காலப்பகுதியில் 15 வருட காலம் அளவில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதனால் மீண்டும் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் துரிதமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார். இதன் கீழ் கொழும்பு பங்குச்சந்தையை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.