பழமைவாதக்கட்சியின் (கன்சர்வேட்டிவ் கட்சி) தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விடயம் சம்பந்தமாக, டிசம்பர் 03, 2019 அன்று, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மின்பில அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பற்றி, வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது, பழமைவாதக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பக்கம் 53 இலுள்ள பந்தியில் இலங்கையைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருப்பதை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு இங்கே குறிப்பிடவிரும்புகிறது:
“நாம் உலகெங்கும் இணக்கப்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான சர்வதேச முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதுடன், முற்காலத்தில் போர் வலயங்களாகவிருந்த சைப்பிரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் இரு அரசாங்கங்களைக் கொண்ட ஒரு தீர்வுக்கான எமது ஆதரவையும் தொடர்ந்து கடைப்பிடிப்போம்”
இந்த விஞ்ஞாபனம் பிரசுரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம், வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் கலந்தாலோசித்தபின்னர், இலங்கை சார்பாக, அந்த நெறிபிறழ்வு பற்றிய தனது பலமான கண்டனத்தை உடனடியாக பழமைவாதக்கட்சியின் துணைத்தலைவர் கௌரவ ஜேம்ஸ் கிளவலி அவர்களுக்குத் தெரிவித்தது. இக்கண்டனமானது; ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர அவர்களால், 27 நவம்பர் 2019 அன்று, பழமைவாதக்கட்சியின் துணைத்தலைவருக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் மூலமாகத் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை நாட்டுக்கு இரு அரசாங்கங்கள் என்ற தீர்வு பற்றிக் குறிப்பிட்டமை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதை உறுதிப்படுத்திய உயர்ஸ்தானிகர், அது எந்தக்காலத்திலும் எந்தவொரு ஐக்கிய இராச்சியத்தின் கட்சிகளதும் நிலைப்பாடாக இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டார். இதுகாலவரையில் ஆட்சிக்கு வந்திருக்கும் எல்லா ஐக்கிய இராச்சிய அரசாங்கங்களும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமாதானத்தையும் இணக்கப்பாட்டையுமே ஆதரித்துவந்தன என்பதை அவர் மீள உறுதிப்படுத்தினார். எனவே, உயர்ஸ்தானிகர், இலங்கை விடயத்தில் பழமைவாதக்கட்சியின் நிலைப்பாட்டை சரியாகப் பிரதிபலிக்கும் வண்ணம், அந்த விஞ்ஞாபனத்திலுள்ள குறிப்பிட்ட பந்தியைப் பொருத்தமான வகையில் திருத்தியமைக்குமாறு கோரினார். அக்கடிதத்தின் பிரதி உங்கள் கவனத்திற்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது. (இணைப்பு I)
உயர்ஸ்தானிகர் மேற்படி கடிதம் மூலமாகவும் பழமைவாதக் கட்சியின் உயர்நிலைசார் தலைவர்களுடன் நேரடியாகவும் தொடர்புகொண்டதன் பின்னர், அக்கட்சியின் உப தலைவர் போல் ஸ்கலி அவர்கள், 27 நவம்பர் 2019 அன்று அனுப்பிய மின்னஞ்சல் மூலமாக பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்:
“இலங்கை பற்றியதிலான எமது கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை, மிகத்தெளிவாகச் சொல்லவேண்டுமெனில், இரு அரசாங்கம் பற்றிய குறிப்பானது, மத்திய கிழக்கின் இஸ்ரேல் - பலஸ்தீனிய தீர்வுக்கானது மட்டுமே (அதன் கொள்கையின்படி). இலங்கை மற்றும் சைப்பிரஸ் நாடுகளைப் பொறுத்தவரையில், பிரிவுபட்ட சமூகங்களுக்கிடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக தொடர்ந்துவரும் முயற்சிகளுக்கு மட்டும் நாம் ஆதரவளிப்போம்”
மேற்படி கருத்தை, ஐக்கிய இராச்சியத்தின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகார அமைச்சுச் செயலாளர், கௌரவ தெரஸா வில்லியர்ஸ் அவர்களும், 30 நவம்பர் அன்று, சமூக ஊடகத்தில் (முகநூலில்) ஒரு பொதுவான பதிவு மூலமாக, பின்வருமாறு உறுதிப்படுத்தியுள்ளார்:
“இரு அரசாங்க தீர்வு எனக்குறிப்பிடப்பட்டதானது, மத்திய கிழக்குக்கு மட்டுமே தவிர, சைப்பிரஸுக்கோ இலங்கைக்கோ அல்ல. நான், வெளிநாட்டுச் செயலாளர் டொமினிக் ராப் அவர்களுடன் இதுபற்றித் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அவரும் இதையே உறுதிப்படுத்தினார் “
பழமைவாதக்கட்சியின் உபதலைவர் போல் ஸ்கலி அவர்கள், 3 டிசம்பர் 2019 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், பழமைவாதக்கட்சியின் நிலைப்பாடு பற்றி மறுபடியும் உறுதிப்படுத்தினார்:
“இலங்கையில் ஆட்சியை உருவாக்குவது தொடர்பாக பழமைவாதக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை…… இரு அரசாங்கங்கள் பற்றிய குறிப்பு மத்திய கிழக்குக்கு மட்டுமே பொருத்தமானது”.
மேற்படி கருத்துக்கள் ஐக்கிய இராச்சியத்தின் பழமைவாதக்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளன என்பதையும் விஞ்ஞாபனத்திலுள்ள நெறிபிறழ்வானது சரியாகத் திருத்தப்படவேண்டியது தொடர்பில் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எடுத்த நடவடிக்கை பற்றியும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
04 டிசம்பர் 2019