அதேபோன்று தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடாத்தத் தேவையான ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் மிகவும் விரைவாக அங்கீகரித்துத் தருமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கைவிடுத்தார்.
இதற்கு மேலதிகமாக கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இனங்காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் அவசியாமான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற விதம் தொடர்பில் சபாநாயகருக்கு விளக்கமளிக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 25ம் திகதி பாராளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போதே இந்தவிடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான நளின் ஜயந்த அபயசேகர¸ பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் ஆகியோருடன்¸ ஆணைக்குழுவின் செயலாளர் டி.டி.ஹேரத்¸ தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க உள்ளிட்டோரும் கலந்து இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியவுடன்¸ பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதி செயலாளர் நாயகமும்¸ பதவியணி தலைமையதிகாரியுமான நீல் இத்தவெல ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்வரும் தேர்தல்களை சுயாதீனமாகவும்¸ நீதியாகவும் நடத்துவதற்குத் தேவையான சூழலை உருவாக்க அவசியமான ஊடக வழிகாட்டல்களை சட்டமொன்றாகக் கொண்டுவருவதற்குத் தேவையான ஆதரவை பாராளுமன்றத்தில் வழங்குவதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.
அதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலை சுயாதீனமாகவும்¸ நீதியாகவும் நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சபாநாயகரின் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய¸ ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்தால், 2020 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.