ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தமது பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்திய விசேட செயற்திட்டங்களுள் ஒன்றான பொலன்னறுவை சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட மருத்துவமனையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி அவர்கள் இன்று (16) பார்வையிட்டார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொண்ட சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷீ ஜங் பின்னுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக சீன அரசாங்கத்தின் பூரண அன்பளிப்பில் இந்த சிறுநீரக மருத்துவமனை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
நோய்க்காரணி கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் அவதியுறும் பல மாவட்டங்களை சார்ந்த மக்களின் நீண்டகால தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தெற்காசியாவில் மிக விசாலமான சிறுநீரக மருத்துவமனையாக பொலன்னறுவை பொது மருத்துவமனையை அண்மித்ததாக இப்புதிய மருத்துவமனை நிர்மாணிக்கப்படுகின்றது.
இதன் 70 சதவீத நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், 2020 ஜூலை 30ஆம் திகதியளவில் சகல நிர்மாணப் பணிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்து மருத்துவமனையை மக்களின் பாவனைக்கு கையளிக்க முடியுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது.
204 கட்டில்கள், 100 இரத்த சுத்திகரிப்பு உபகரணங்கள், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட உலகின் மிக நவீன உபகரணங்களைக் கொண்ட பரிசோதனைக்கூடம் மற்றும் அதிதொழிநுட்ப வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனை, 12 பில்லியன் ரூபா நிதி முதலீட்டில் நிர்மாணிக்கப்படுகின்றது.
இன்று முற்பகல் மருத்துவமனை வளாகத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அதன் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன், அதனை விரைவில் நிறைவு செய்து சிறுநீரக நோயினால் அவதியுறும் நாடெங்கிலுமுள்ள அப்பாவி மக்களுக்கு அதன் நன்மைகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட மருத்துவமனையை மக்களிடம் கையளிப்பதற்கு முன்னோடியாக அதன் நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பையும் வழிகாட்டலையும் வழங்கிவரும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இதன்போது விசேட நினைவுப்பரிசொன்றும் வழங்கப்பட்டது.
பொலன்னறுவை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இந்திக்க சம்பத் குமார உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.