21ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நீர்ப்பாசன புரட்சியாக கருதப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீரினை சுபவேளையில் திறந்துவிடும் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை மக்களிடம் கையளித்தல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது.

மாத்தளை மாவட்டத்தின் தும்பர பள்ளத்தாக்கில் நக்கில்ஸ் மலைத் தொடரின் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை இடைமறித்து லக்கல, பல்லேகம பிரதேசத்தில் களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 248 மில்லியன் கனமீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும்.

களுகங்கை பள்ளத்தாக்கு பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்படும் 3,000 குடும்பங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்கப்படுவதுடன், பழைய ஹத்தொட்ட கால்வாயினால் நீரைக் கொண்டு சென்று அபிவிருத்தி செய்யப்பட்ட சுமார் 2,000 ஏக்கர் அளவிலான காணியில் தொடர்ச்சியாக பயிர்ச்செய்வதற்கான நீரும் வழங்கப்படும். அதன் பின்னர் எஞ்சும் நீர் மொரகஹகந்த நீர்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும். இதற்காக 9 கிலோமீற்றர் நீளமான சுரங்க கால்வாய் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இக்கால்வாயினூடாக களுகங்கை நீர்த்தேக்கத்தில் நிரம்பும் நீரானது செக்கனுக்கு 35 கனமீற்றர் வேகத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.

களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டதனால் மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தின் மேல் எலஹெர கால்வாயினூடாக மஹாகனதராவ வரை கொண்டு செல்லப்படும் நீரின் அளவும் பழைய அம்பன் கங்கை, யோத கால்வாய் ஊடாக மின்னேரியா, கிரித்தலை, கவுடுல்ல, கந்தளாய் வரை கொண்டு செல்லப்படும் நீரின் அளவும் அதிகரிப்பதனால் அப்பிரதேச விவசாயம் மேலும் வளர்ச்சியடையும்.

அது மட்டுமன்றி பழைய அம்பன் கங்கையின் ஊடாக போவத்தென்ன நீர்தேக்கத்திலிருந்து மொரகஹகந்த எலஹெர கால்வாய் பிரதேசத்திற்கு செல்லும் நீர் வடமேல் மாகாணத்தில் உள்ள 40,000 குடும்பங்களுக்கு வருடம் முழுவதும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும் ஏனைய குடிநீர் மற்றும் கைத்தொழிலுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கும் ஏற்றவாறு களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் மொரகஹகந்த நீர்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.

ரஜரட்ட மக்களின் நீண்டகால கனவினை நனவாக்கி, மகாவலி பாரிய அபிவிருத்தி திட்டத்தின் இறுதி செயற்திட்டமாக மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்கள் மக்களுக்கு கையளிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி அவர்களின் அளவற்ற அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே காரணமாகும்.

இன்று முற்பகல் இடம்பெற்ற சுபவேளையில் களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீர் ஜனாதிபதி அவர்களால் திறந்துவிடப்பட்டது.

இதன் பின்னர் மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட புதிய அம்பன நகரம் ஜனாதிபதி அவர்களால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அம்பன, நாவுல பிரதேசத்தை சேர்ந்த சுமார் 10,000 குடும்பங்கள் தமக்கான சேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்வதற்காக கோன்கஹவெல பழைய பிரதேச மருத்துவமனைக்கு பதிலாக சகல வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவமனை, கமநலசேவைகள் நிலையம், சமூர்த்தி அலுவலகம், பொலிஸ் காவலரண், தபால் அலுவலகம், நிலசெவன சேவை நிலையம், வாராந்த சந்தைக் கட்டிடம், வனப் பாதுகாப்பு அலுவலகம், லக்கல, குருவெல பிரதேச வன ஜீவராசிகள் அலுவலகம் மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்டியதாக கண்கவரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதி ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

அம்பன நகரின் புதிய மருத்துவமனையை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டதோடு, தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுள் பொதுமக்களுக்கு அதிகளவிலான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் திட்டமாக அமைவது மொரகஹகந்த – களுகங்கை பாரிய பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டமாகுமென தெரிவித்தார்.

நாட்டின் விவசாய மக்களுக்கு இத்திட்டத்தின் ஊடாக பெருமளவு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதனால் விவசாய பொருளாதாரம் சுபீட்சமடைவதுடன், நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் இதனூடாக பெரும் பங்களிப்பு வழங்கப்படுகின்றதென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் இரசாயன பசளைகள் பெற்றுத்தரப்படுமென தெரிவித்துள்ள கருத்துடன் தான் உடன்படவில்லை எனவும் தெரிவித்தார். இரசாயன பசளை பயன்பாடானது சிறுநீரக நோய் அதிகளவில் பரவுவதற்கு காரணமாகும் என்பது தற்போது உறுதியாக கண்டறியப்பட்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் அரசியல் தலைவர்களின் கடமைகளானபோதிலும் ஆரோக்கியமான மக்கள் சமூகத்தை உருவாக்குவதற்கு தடை ஏற்படும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்வதை அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காக இரசாயன பசளை பயன்பாட்டினை தவிர்த்து சேதனப் பசளை பயன்பாட்டுக் கொள்கைகளை நோக்கி நாடு பயணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஊடக சந்திப்பினை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் புதிய மருத்துவமனையின் நோயாளர் விடுதியை பார்வையிட்டதுடன், நோயாளர்களின் நலன்களையும் விசாரித்தார்.

இதன் பின்னர் நிகழ்விற்கு வருகை தந்திருந்த பொதுமக்களோடும் ஜனாதிபதி அவர்கள் கலந்துரையாடினார். ரஜரட்ட மக்களின் பிரதான பிரச்சினையான நீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்த இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை நாட்டிற்கு பெற்றுக்கொடுத்தமை மற்றும் அதனோடு இணைந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி ஆகியவற்றுடன் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிரதேச மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.

மத்திய மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் டி.எம்.எஸ்.திசாநாயக்க, மொரகஹகந்த செயற்திட்டத்தின் பணிப்பாளர் டப்ளி.டி.விஜயரத்ன உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.