நீடிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holy) 11ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளித்தார்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்களுக்கும் அவுஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர் மெல்கம் டர்ன்பூல் அவர்களுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இணக்கம் காணப்பட்டதன்படி சிறுநீரக நோய்த் தடுப்புக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தொழிநுட்ப உதவியை பெற்றுக்கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இவ்வுடன்படிக்கை 2019 ஆண்டு மே மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
ரஜரட்ட உட்பட பல பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பாக உள்ள சிறுநீரக நோய்த் தடுப்புக்காக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இந்த நோய் தொடர்பாக ஆய்வு செய்து அது பரவுவதை தடுப்பதற்காக தொழிநுட்ப உதவியை வழங்கும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் தற்போது அவுஸ்திரேலிய அனு விஞ்ஞான தொழிநுட்ப நிறுவனம் இலங்கையில் முன்னெடுத்துள்ளது.
சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.