திவுலன்கடவல மகா வித்தியாலயம் மற்றும் பகமூன மஹசென் மகா வித்தியாலயம் உள்ளிட்ட ஐந்து பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் தலைமையில் 28ம் திகதி இடம்பெற்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடம், விளையாட்டு மைதானம், கேட்போர்கூடம், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உட்பட சுமார் 18 கோடி ரூபா செலவில் இப்பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மாணவர்களிடம் ஆளுநரினால் கையளிக்கப்பட்டது.

இங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நாட்டின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் நாடளாவிய ரீதியில் விரிவான பல பணிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அபிவிருத்தியில் பின்தங்கியிருந்த பொலன்னறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்திகளை மேற்கொண்டு பொலன்னறுவை மக்களுக்கான பொறுப்பினை உரிய முறையில் நிறைவேற்றியிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.