சிறிசேன அவர்களுக்கும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ புகுடா அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று 22ம் திகதி முற்பகல் டோக்கியோ நகரில் இடம்பெற்றது.
ஜப்பானின் புதிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று டோக்கியோ நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி அவர்களுக்கும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ புகுடா, இலங்கைக்கான முன்னாள் ஜப்பானின் தூதுவர் கெனடி சுகனுமா உள்ளிட்டோர் ஜனாதிபதி அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வருகை தந்து ஜனாதிபதி அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நெருங்கிய தொடர்புகளை நினைவுகூர்ந்ததுடன், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை பலப்படுத்துவதற்கும் உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள், தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட பணிகளை ஜப்பான் முன்னாள் பிரதமர் பெரிதும் பாராட்டினார்.
ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இலங்கைக்காக முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்ந்தும் நாட்டுக்கு தேவையானவை என்று முன்னாள் ஜப்பான் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் நாட்டின் சமூக முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட புதிய நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய ஜப்பானின் முன்னாள் பிரதமர், கடந்த உயிர்த்த ஞாயிறு துன்பியல் சம்பவத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததையும் பாராட்டினார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றபோதும் இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவற்கான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தனது பதவிக் காலத்தின்போது இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக ஜப்பான் அரசாங்கம் தனக்கு வழங்கிய விசேட ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கையின் ஒரு நெருங்கிய நட்பு நாடு என்ற வகையில் ஜப்பானின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பை நினைவுகூரும்முகமாக நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.