நாட்டில் உருவாகியிருப்பது விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளை விட்டும் விலகிய கல்வி முறைமையினாலாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
எனவே தேசிய கல்விக் கொள்கைகளில் தேவையான அடிப்படை மாற்றங்களை மேற்கொண்டு உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் புதிய கல்வி முறைமைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
25ம் திகதி முற்பகல் பொலன்னறுவை கல்லேல்ல தேசிய விளையாட்டரங்கில் ஆரம்பமான “ஷில்ப சேனா” கண்காட்சியின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சின் நெறிப்படுத்தலில் இடம்பெறும் ஷில்ப சேனா கண்காட்சியின் இரண்டாவது கட்டம் அறிவு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பல்வேறு மகிழ்வளிப்பு நிகழ்வுகளுடன் இன்று முதல் 29 ஆம் திகதி வரை பொலன்னறுவை கல்லேல்ல தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறும்.
உலகம் முன்னேற்றமடைவது ஆராய்ச்சிகளின் ஊடாக உருவாகும் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகளின் மூலமேயாகும் என்றும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக எமது நாட்டு மக்கள் முகங்கொடுக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்காக விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படும் இந்த யுகத்தில் அது பற்றி இத்துறையில் உள்ள நிபுணர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.
அரசியல் துறையிலும் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி துறைகளிலும் பெரும்பாலானவர்கள் நாட்டைப் பற்றி சிந்திக்காது தம்மைப்பற்றி மட்டுமே சிந்தித்து செயற்படுவது நாடு என்ற வகையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் பயணத்தில் முக்கிய சவாலாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இலவச கல்வியைப் பெறும் கல்விமான்கள் நாட்டைப்பற்றியல்லாது தம்மைப்பற்றி மட்டுமே சிந்தித்து நாட்டை விட்டுச் சென்றதன் காரணத்தினால் பொறியியலாளர், வைத்தியர் மற்றும் கணக்காளர் சேவைகளில் நாட்டுக்கு தேவையான கல்விமான்களை நாடு இழந்து வருவது பெரும் பிரச்சினையாகும் என்றும் குறிப்பிட்டார்.
“பலமான கரங்களினால் வளமான நாடு” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெறும் ஷில்ப சேனா கண்காட்சி முக்கியமாக தொழிநுட்ப துறையில் தொழில் முயற்சி, தொழிற்சந்தை, புதிய உற்பத்திகள், நீலப்பசுமை பிரிவு மற்றும் மகிழ்வளிப்பு என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்பத் துறைப் பிரிவில் STEM கல்வி, விண்வெளித் தொழிநுட்பம், உயிர்த்தொழிநுட்பம், ரோபோ தொழிநுட்பம், நனோ தொழிநுட்பம், மெகாடொனிக்ஸ், புதிய வலுச்சக்தி, நீலப் பசுமைத் தொழிநுட்பம், 5G IOT ஆகிய முக்கிய கருப்பொருள்களில் நவீன விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறை அறிவை ஊக்குவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஷில்ப சேனா கண்காட்சியின் புதிய உற்பத்திகள் பிரிவில் இந்நாட்டில் புத்தாக்குனர்கள் உருவாக்கியுள்ள 250க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவ் உற்பத்திகளை வர்த்தக மயப்படுத்துவதற்குத் தேவையான செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டதுடன், பணிக் குழாமினருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.
விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் சிந்தக எஸ்.லொக்குஹெட்டிகே உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.