எண்ணக்கருவின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்தினால் நெறிப்படுத்தப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அடுத்த இரண்டு மாதங்களில் நான்கு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அந்த வகையில் செப்டெம்பர் 23 – 28 பதுளை மாவட்டத்திலும் ஒக்டோபர் 04 – 09 அநுராதபுரம் மாவட்டத்திலும் ஒக்டோபர் 10 – 14 ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒக்டோபர் 16 – 21 கொழும்பு மாவட்டத்திலும் நிகழ்ச்சித்திட்டங்கள் இடம்பெறவுள்ளன.
2019 பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 07 மாத காலப்பகுதியில் புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, மொனராகலை, கம்பஹா, யாழ்ப்பாணம் ஆகிய 07 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக 1200 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் செலவிடப்பட்டுள்ளது.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் குறித்து அண்மையில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தினால் மக்கள் நலன்பேணலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு, தேசிய உணவு உற்பத்தி, கிராமசக்தி, ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா, சிறுவர்களைப் பாதுகாப்போம் மற்றும் முதியோர், அங்கவீனமுற்றவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் இதனூடாக விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட மட்டத்தில் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை துரிதப்படுத்தவும் புதிய அபிவிருத்தி திட்டங்களை புதிதாக நடைமுறைப்படுத்தவும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தினூடாக கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன இதன்போது தெரிவித்தார்.
அரசியல் பேதங்களின்றி அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை வழங்கும் வகையில் முழு அரச பொறிமுறையையும் ஒருங்கிணைத்து வினைத்திறன்மிக்க வகையில் நிகழ்ச்சித்திட்டங்களை நெறிப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் கிராமிய மக்களுக்கு சிறிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக முன்னுரிமை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அரசியல் சூழ்நிலை எவ்வாறானதாக இருந்தபோதிலும் வருடாந்த அபிவிருத்தி திட்டங்களுடன் அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.