அரசாங்க அதிகாரிகளும் தொழில் வல்லுனர்களும் தேசத்தின் பாராட்டுக்கு உரியவர்கள் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி திட்டத்தை தேசத்திற்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்பு செய்தவர்களை பாராட்டி 08ம் திகதி முற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்க வளாகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பாரிய நீர்த்தேக்க திட்டமான மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை தேசத்திற்கு வழங்குவதற்காக அறிவினாலும் உடலுழைப்பினாலும் பங்களிப்பு செய்த 400 பேரை பாராட்டி இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டுவரும் சினோஹயிட்ரோ சீன நிறுவனத்தின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட பொறியியலாளர்களையும் இத்திட்டத்தின் பணிப்பாளர் டி.பி.விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகளையும் பாராட்டி ஜனாதிபதி அவர்கள் விருதுகளை வழங்கி வைத்தார்.
நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கும் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான நாடாக முன்னோக்கி செல்வதற்கும் மகாவலியினால் கிடைத்த பாரிய சக்தியை எவரும் இலகுவாக மறந்துவிட முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் இங்கு மேலும் தெரிவித்தார்.
நாட்டின் புதிய நீர்ப்பாசன நாகரீகத்தின் பின்புலத்தை அமைத்த மகாவலி இயக்கத்தின் இறுதி கட்டமான மொரகஹகந்த – களுகங்கை திட்ட கனவை நனவாக்குவதற்கு கிடைத்தமை பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த திட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைமைப் பொறியியலாளர் முதல் கீழ் நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் தனது கௌரவம் உரித்தானதாகும் எனக் குறிப்பிட்டார்.
ரஜரட்ட விவசாயிகளின் நீண்டகால கனவை நனவாக்கி நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் தற்போது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றது. பராக்கிரம சமுத்திரத்தைப் போன்று 06 மடங்கு விசாலமான 660,000 ஏக்கர் அடிகள் கொள்ளளவுடன் இரண்டு நீர்த்தேக்கங்களைக் கொண்ட மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு திட்டத்தின் கீழ் வடக்கு கால்வாய், வடமேல் கால்வாய், மினிப்பே கால்வாய், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், வடமேல், வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு விவசாயிகளுக்கு இதன்மூலம் நன்மைகள் கிடைப்பதுடன், குடிநீர் தேவையும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
உணவு இறக்குமதிக்காக நாட்டில் வருடாந்தம் செலவாகும் சுமார் 10,000 கோடி ரூபாவை நாட்டில் மிச்சப்படுத்தி சிறுபோகத்தில் பயிர்ச் செய்யப்படாத 95,000 ஹெக்டெயர் காணிகளிலும் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 5,000 ஹெக்டெயர் காணிகளிலும் இறக்குமதி பொருட்களான சோளம், கௌபி, பயறு, எள்ளு, குரக்கன் மற்றும் பண்ணை உற்பத்தி விடயங்களில் மீதப்படுத்துவதன் மூலம் இத்திட்டத்திற்காகவும் கால்வாய் திட்டத்திற்காகவும் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதியை சில வருடங்களில் மீட்டி முழு நாட்டினதும் முதலீடாக மாற்ற முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் மூலம் 25 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம் வருடாந்த வருமான இலக்காக 1545 மில்லியன் ரூபா குறிப்பிடப்பட்டிருக்கின்றது. கடந்த வருடம் இதன்மூலம் 1100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேநேரம் நன்நீர் மீன் உற்பத்தியை அதிகரித்தல், சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்தல், நேரடி மற்றும் மறைமுகமான தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நன்மைகளாகும்.
ரஜரட்ட விவசாயிகளின் கண்ணீர் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்த்தேக்கத் திட்டத்தை தேசத்திற்கு வழங்குவதற்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இதன்போது விசேட பாராட்டு பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிகார, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேரா, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.