கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் ஐந்தாவது நாள் இன்றாகும்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் போதைக்கு அடிமையானவர்களை விடுவிப்பதற்காக மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டமொன்று இன்று (28) முற்பகல் பொல்கஹவெல நகர மண்டபத்தில் இடம்பெற்றது. வடமேல் மாகாண சபையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவும் பொல்கஹவெல பொலிஸ் மற்றும் பிரதேச சபையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

அபாயகர ஒளடதங்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்கள், சிகிச்சைகள் தொடர்பில் வருகை தந்திருந்த இளைஞர் யுவதிகளுக்கும், வளர்ந்தோருக்கும் அறிவூட்டுவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உள மருத்துவ தொழிநுட்ப பிரிவின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் விசேட உரையொன்று நிகழ்த்தப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த இளைஞர், யுவதிகள் ஜனாதிபதி அவர்கள் நாட்டின் முதற் பிரஜை என்ற வகையில் சமூகத்திற்கு ஆலோசனைகளை வழங்கி இந்த போதைப்பொருளுக்கெதிரான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு வழங்கிவரும் விரிவான பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களின் காரணமாக இளைஞர்கள் என்ற வகையில் அறியாமல் செய்த தவறுகளை அறிந்துகொள்வதற்கு இன்று தமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும். இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமானால் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியுமென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வடமேல் மாகாணத்தின் பிரதி தலைமை செயலாளர் பீ.பி.விக்ரமசிங்க உள்ளிட்ட மாகாணத்தின் அரச அதிகாரிகள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்துடன் இணைந்ததாக தென் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதைப்பொருளுக்கெதிரான நடை பவனி இன்று (28) முற்பகல் பென்தர எலகாக்க மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது. எல்பிட்டிய வலயக் கல்வி அலுவலகமும் ஊரகஸ்மங்கந்திய பொலிசாரும் இணைந்து அந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுசரணை வழங்கினர்.

இதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு வாரத்துடன் இணைந்ததாக பாடசாலை தின நிகழ்ச்சித்திட்டமொன்று கொழும்பு, மோதரை இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்றது. “போதைப்பொருள் ஒழிப்பு – பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு சுவரொட்டி கண்காட்சி ஒன்றும் கல்லூரியின் முன்னால் பாடசாலை மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கொழும்பு, ஜனாதிபதி மகளிர் கல்லூரியிலும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று மேல் மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் மாலா பெரேராவின் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் ஆறாவது தினமான நாளைய தினம் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி பல விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.