போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூலை 01ஆம் திகதி வரையான வாரம் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது நாளான இன்று மக்கள் அமைப்புகளை மையப்படுத்தி விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்களின் விரிவான பங்கேற்பை காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய பிரதான நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றதுடன், போதைப்பொருள் பாவனையின் விபரீதங்கள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டும் மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து வாகன ஊர்வலங்களில் வருகை தந்தவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றினர்.

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகளும் இந்நிழ்வில் கலந்துகொண்டனர்.

“நான் போதைப்பொருளை எதிர்க்கிறேன்” என்ற கருப்பொருளின் கீழ் பாரிய வாகன ஊர்வலம் ஒன்று இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தின் அருகில் ஆரம்பமாகி கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்திற்கு வருகை தந்ததுடன். அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களிலும் பங்குபற்றினர்.

இதேவேளை வவுனியா மாவட்ட செயலகத்திற்கருகில் போதைப்பொருளுக்கு எதிரான வாகன ஊர்வலம் ஒன்று இன்று காலை ஆரம்பமானது. வவுனியா மாவட்ட செயலகமும் வட மாகாண ஆளுநர் அலுவலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

போதைப்பொருள் பாவனையின் விபரீதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தனிப்பட்ட மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் சுவரொட்டிகள், பதாதைகளை காட்சிப்படுத்தி பயணித்த இந்த வாகன ஊர்வலம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தை வந்தடைந்தது.

ஊவா மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றும் ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஊவா மாகாண ஆளுநர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை பாடசாலை சமூகத்தை தெளிவூட்ட விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று இன்று அத்தனகல்லை, ரன்பொக்குனகம மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதுடன், மேல் மாகாண கல்வி திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் 3வது நாளான நாளைய தினம் அரச நிறுவனங்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.