சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரையின்பேரில் நேற்று முதல் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாரத்தின் முதலாவது தினமான பாடசாலை தினத்தில் தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை, மதுபானம் மற்றும் ஏனைய போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பிரதான பாடசாலை நிகழ்வு கொலன்னாவ டெரன்ஸ் என் டி சில்வா கல்லூரியில் நடைபெற்றது.
இதனுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மேலும் வெல்லம்பிட்டிய சிங்கபுர கிராமத்தில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி போதைப்பொருள் ஒழிப்பு பற்றி கிராம மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டமும் தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சங்கைக்குரிய இடமேகம பியநந்த தேரர், தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பேராசிரியர் சமன் அபேசிங்க, அதன் பணிப்பாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிறிசேன ஹேரத் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி அதிகாரிகள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றினர்.
இதேநேரம் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் போதையிலிருந்து விடுதலைப் பெறுவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கை, சட்டதிட்டங்களை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல், சுற்றிவளைப்புகள், சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் போன்ற முக்கிய நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாளான நாளைய தினம் மக்கள் அமைப்புகளை மையப்படுத்தி விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் பிரதான நிகழ்வு ஜூலை மாதம் 01ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.