இலங்கையின் பொருளாதாரத்தை கட்டிழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது தமது நோக்கமாகுமென்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
தஜிகிஸ்தான் ஜனாதிபதி (Emomali Rahmon) அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5வது மாநாட்டில் (CICA) பங்குபற்றுவதற்காக தஜிகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி அவர்கள், தனது விஜயத்தின் முதலாவது நடவடிக்கையாக தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார்.
துஷன்பேயில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இரு தலைவர்களுக்குமிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் முறையான திட்டமொன்றின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.
மேலும் இருநாடுகளுக்கிடையில் முதலீட்டு மற்றும் வியாபார வாய்ப்புகளை கண்டறியும் துரித நிகழ்ச்சித்திட்டமொன்று பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பது தொடர்பிலும் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் 2016ஆம் ஆண்டு தான் இலங்கைக்கு விஜயம் செய்ததை நன்றியுடன் நினைவுகூர்ந்ததுடன், அந்த விஜயத்தின்போது தமக்கு வழங்கப்பட்ட உபசரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்குமிடையிலான நட்புறவு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் மேலும் நெருங்கிய உறவுகள் கட்டியெழுப்பப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்
ஜனாதிபதி அவர்கள் இன்று (14) முற்பகல் தஜிகிஸ்தான் தேசிய தொல்பொருள் நிலையத்திற்கும் விஜயம் செய்தார். இந்த தொல்பொருள் நிலையத்தில் பல சிறிய மற்றும் பெரிய கண்காட்சி கூடங்கள் அமைய பெற்றுள்ளதுடன், இயற்கை, பண்டைய, மத்தியகால, நவீனகால வரலாறுகள் மற்றும் கலை அம்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொல்பொருள் நிலையத்தின் வடிவமைப்பை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமைவாய்ந்த புத்தர் சிலையையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், துஷன்பே நகரில் உள்ள (Nurek) நுரெக் நீர் மின்சார நிலையத்திற்கு விஜயம் செய்தார் நுரெக் நீர்மின்சார நிலையம் தஜிகிஸ்தானின் பிரதான மின்சக்தி நிலையமாகும் என்பதுடன், அதிக குளிர் காலத்தில் பெருமளவு தேவைப்படும் மின்சக்தி தேவையை நிறைவேற்றுவதுடன், ஏனைய காலங்களில் மேலதிக மின்சக்தியை ஏற்றுமதி செய்யவும் தஜிகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சக்தி நிலைய நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து தஜிகிஸ்தானின் வெளிநாட்டு வருமானத்தில் மின்சார ஏற்றுமதி முக்கிய இடம் வகிக்கின்றது.
மின்சக்தி நிலையத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்களுக்கு அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
மின்சார நிலைய வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை வரவேற்பதற்காக அமோக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், தஜிகிஸ்தான் நாட்டின் உப பிரதமர் ஜனாதிபதி அவர்களை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அவர்களும் அந்நாட்டின் உதவிப் பிரதமரும் கலந்துகொண்டனர்.