உறுப்பினர்களையும் 22 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளையும் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்குதல் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
04ம் திகதி பிற்பகல் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையக கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நீண்டகால குறைபாடாக காணப்பட்ட தலைமையக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 120 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், இந்த கட்டிடமானது மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 30 வருடகால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முப்படை மற்றும் பொலிசாருடன் ஒன்றிணைந்து சிவில் பாதுகாப்புத்துறையினர் ஆற்றிய மகத்தான சேவையானது வரலாற்றில் அழியாது இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுப்பதாகவும் 2015 ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிக்கமைய சிவில் பாதுகாப்புத்துறை சேவையை ஓய்வூதியத்திற்குரிய அரச சேவையாக மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இன்று ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவொன்று ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சிவில் பாதுகாப்புப் படையினரின் நலன்புரி தேவைகளை கருத்திற்கொண்டு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார்.
60 வயது பூர்த்தியடைந்ததன் பின்னர் 2015.04.23ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக சிலருக்கு ஜனாதிபதி அவர்கள் கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.
அதேபோன்று 2015.04.23ஆம் திகதி சேவையை நிரந்தரப்படுத்தியதன் பின்னர் காலஞ்சென்ற உறுப்பினர்களின் வாழ்க்கைத் துணைக்கு, விதவைகள் மற்றும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கான ஓய்வூதியம், பணிக்கொடை கொடுப்பனவினை வழங்கிவைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
தலைமையக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு ஆரம்பம் முதல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவரையும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.
ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
வண. இத்தேபானே தம்மாலங்கார, வண. கலாநிதி கொட்டுகொட தம்மாவாச ஆகிய தேரர்களும் இராஜாங்க அமைச்சர்களாகிய ருவன் விஜேவர்தன, எரான் விக்ரமரத்ன, ஜீவன் குமாரதுங்க ஆகியோரும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டேகொட, முப்படை மற்றும் பொலிஸ் பிரதானிகள், சிவில் பாதுகாப்பு துறை பணிப்பாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு காணியை வழங்கிய மோல்பே ஸ்ரீ கங்காராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி வண. பதனங்கல சமித்த நாயக்க தேரரை தரிசித்து அவரின் சுகநலனை விசாரித்தறிந்தார்.
சிவில் பாதுகாப்புத் துறையின் முயற்சியால் விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புனித சின்னங்கள் வைக்கப்படும் மண்டபம் மற்றும் அன்னதான மண்டபத்தையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.