இந்தியப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட நரேந்திர மோடி, இரண்டாவது தடவையாகவும் நேற்று பிற்பகல் இந்திய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்ததோடு, அவரது அழைப்பின்பேரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் அந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 31ம் புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது.

ஹைதராபாத் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த நட்புடன் வரவேற்றார்.

சுமூக கலந்துரையாடலை தொடர்ந்து அரச தலைவர்கள் இருவரும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தனது அழைப்பையேற்று பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

மேலும் அண்மையில் இலங்கைக்கு முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தாக்குதல் குறித்து இந்திய பிரதமர் வருத்தம் தெரிவித்தார். சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவும் பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காகவும் ஒன்றிணைந்து செயற்பட அரச தலைவர்கள் இதன்போது உறுதிபூண்டனர்.

இம்முறை இடம்பெற்ற இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று இரண்டாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவரது எதிர்வரும் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

நட்பு நாடுகள் என்ற வகையில் நெருக்கமாக செயற்படும் அரச தலைவர்களாக இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவும் இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.