போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி அச் செயற்திட்டத்தினை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூலை 01ஆம் திகதி வரையான காலத்தை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றங்களை குறைத்தல் பற்றிய சட்ட வரைவு தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் தலைமையில் 27ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மதுவரி கட்டளைச் சட்டம், விஷ போதைப்பொருள் கட்டளை திருத்தச் சட்டம், சிறைச்சாலைகளின் பாதுகாப்பு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் நிலவும் போதைப்பொருள் பகுப்பாய்வுடன் தொடர்பான பிரச்சினைகள் போன்ற விடயங்களைப் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வண. குப்பியாவத்தே போதானந்த தேரர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உரிய நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பதிற்கடமை பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.