பயங்கரவாத சவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது தூதுவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அவர்கள், தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாகவும் உறுதியளித்தார்.
பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டின் பாதுகாப்புத் துறையினருக்கு வெளிநாட்டு புலனாய்வுத் துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளையும் பாராட்டினார்.
ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் இந்த அனைத்து நாடுகளும் வழங்கிய ஒத்துழைப்பையும் பொருளாதார அபிவிருத்திக்கான உதவியையும் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குவதற்கு உதவுமாறும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளித்தமைக்காக இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்த தூதுவர்கள், இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான தலையீட்டை செய்வதாக உறுதியளித்தனர்.
இதேநேரம் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டிருப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நபர்கள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது குறித்தும் விளக்கினார்.
மேலும் இத்தகைய கொடூர தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதிய சட்டங்கள் வகுக்கப்படுவதுடன், நிறுவனக் கட்டமைப்பொன்றை தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.