இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய ஆற்றல் எமது இராணுவத்தினரிடம் காணப்படுவதாக முப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் உறுதியாக நம்புவதாக இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற “இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும்” பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
தாய் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் நாட்டின் ஆட்புல எல்லையை பாதுகாப்பதற்காகவும் உயிர்த் தியாகம் செய்த, காணாமல்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரை நினைவுகூர்ந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ நினைவுத் தூபி முன்னிலையில் நினைவு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன.
முப்பது வருடகால கொடிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த வெற்றியை அடைந்து பத்து வருடங்கள் நிறைவுபெறும் இந்த சந்தர்ப்பத்தில், அதற்கு முற்றிலும் வேறுபட்ட சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிர்பாராத வகையில் முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்நாட்டு முப்படையினர், புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கடந்த முப்பது ஆண்டு கால யுத்த அனுபவங்களை பயன்படுத்தி புதிய பயங்கரவாத சவாலை நிச்சயமாக வெற்றிக்கொள்வதற்கான ஆற்றல் அனைவருக்கும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
முப்பது வருடகால கொடிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்த, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தனது கௌரவத்தை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவர்களின் பெற்றோர்கள், மனைவிமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அத்தோடு தற்போது கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களால் தாய் நாட்டுக்காக ஆற்றும் சிறப்பான சேவையையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் முப்படை தளபதிகள், பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், தேசிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜன்மிக்க லியனகே மற்றும் உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற வைபவத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை. – 2019.05.19
கொடிய எல்ரீரீஈ பயங்கரவாதத்தை இல்லாதொழித்த பத்தாண்டு பூர்த்தியை கொண்டாடுவதற்கே நாம் இன்று இங்கு ஒன்றுகூடி இருக்கின்றோம்.
ஜனாதிபதி என்ற வகையில் நான் முப்பது ஆண்டுகால போர்க்களத்தில் நாட்டுக்காக போராடி உயிர்த் தியாகம் செய்த இராணுவ மகத்தான வீரர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாகவும் தாய் நாட்டின் சார்பாகவும் கௌரவம்சார்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன். நாட்டு மக்களுக்கு சுதந்திரம், ஜனநாயகம், நிலையான சமாதானம் ஆகியவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இராணுவ வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தார்கள். அதேபோன்று நாட்டின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்கு வீரத்துடன் போர்க்களத்தில் போரிட்டு உயிரைத் தியாகம் செய்தார்கள். அவர்களின் நேர்மை, தியாகம், அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதாகும். முப்பது வருடகால கொடிய பயங்கரவாத யுத்தத்தில் உயிரைத் தியாகம் செய்த தாய் நாட்டின் புதல்வர்களை இந்த சந்தர்ப்பத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கின்றேன். அதேபோன்று யுத்தத்தினால் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் கௌரவத்துடன் நினைவுகூர்கின்றேன்.
அன்று தாய் நாட்டுக்காக போர்புரிந்து நாட்டிற்கு வெற்றியை பெற்றுத் தந்த இராணுவ வீரர்கள் இன்றுவரை வென்றெடுத்த வெற்றிகளுடன் தாய் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் சேவையாற்றி வருகின்றார்கள், அத்தோடு இயற்கை அனர்த்தங்களின்போதும் நாட்டு மக்களின் இன்னல்களை தீர்ப்பதற்கும் கடமைக்கு அப்பாற்பட்ட மனித நேய சேவையை ஆற்றி வருவதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, மனிதாபிமான சேவைகளில் ஈடுபடும் இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் சிவில் பாதுகாப்புத் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் பத்தாண்டு நினைவு தினம் இதுவாகும். கடந்த ஒன்பது வருடங்களாக அவர்களை நினைவுகூர்ந்ததைப்போன்றே இன்றும் அவர்களை நினைவுகூர்கின்றோம். 80களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயங்கரவாத யுத்தத்தினால் இன்று வரை பல இராணுவ வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்துள்ளதுடன், சில இராணுவ வீரர்களின் குடும்பங்கள் 40 வருடகால கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றது. இலங்கை தேசத்தினர் என்ற வகையிலும் இலங்கை நாட்டு பிரஜைகள் என்ற வகையிலும் அவர்களது கண்ணீருக்கு எமது இதயத்தில் இடமளிப்பதுடன், மீண்டுமொருமுறை அவர்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
பல அசௌகரியங்களுக்கு மத்தியிலும் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தோம். 1980ஆம் ஆண்டு முதல் ஆட்சிபீடம் ஏறிய அனைத்து அரச தலைவர்களும் இராணுவ தளபதிகளும் பொலிஸ் சிவில் பாதுகாப்புத் துறையை சேர்ந்தவர்களும் சுமார் 40 ஆண்டுகாலமாக கொடிய பயங்கரவாதத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். நாம் 30 ஆண்டு கால கொடிய பயங்கரவாதத்தின் அனுபவத்தினை கொண்டவர்களாவோம். அதேபோன்று அப்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு நட்பு நாடுகளிலிருந்து இராணுவத்தினரை வரவழைப்பதற்கு நேர்ந்தது. அதற்கமைய எமது அயல் நாடான இந்தியாவிலிருந்து எல்ரீரீஈ பயங்கரவாதத்தை அழிப்பதற்கு சுமார் ஒரு இலட்சம் இந்திய இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களாலும் எல்ரீரீஈ பயங்கரவாதத்தை அழிக்க முடியாமல் போனது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றினை கொண்ட இலங்கைத் தீவின் மைந்தர்களாகிய நாம் வரலாறு முழுவதும் போர் குணம் கொண்ட இனமாகவே இருந்துள்ளோம். இலங்கை வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் நாம் வெளிநாட்டுப் படையெடுப்புகளுக்கும் முகங்கொடுத்திருக்கின்றோம். அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிநாட்டு படையெடுப்புகளை தோல்வியடையச் செய்வதற்கு எமது இராணுவத்தினர் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று முப்பது வருடகால கொடிய பயங்கரவாதத்தை பலத்த சிரமத்திற்கு மத்தியில் 2009 மே மாதம் எல்ரீரீஈ பயங்கரவாத அமைப்பின் தலைவனை இல்லாதொழித்து பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். தாய் நாட்டை விடுதலை செய்ததன் பின்னர் தேசத்தின் நன்மைக்காகவும் எதிர்கால அபிவிருத்திக்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் செற்பட வேண்டுமென உன்னத உறுதிமொழியை நாம் அனைவரும் எடுத்துக்கொண்டோம்.
10 ஆண்டுகளாக நாம் சுதந்திரத்தை அனுபவித்து வந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஏற்பட்ட சர்வதேச பயங்கரவாதிகளின் தாக்குதலினால் 300க்கு கிட்டிய இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன், எமது இராணுவத்தினருக்கும் முப்படையினருக்கும் புலனாய்வு பிரிவினருக்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் மீண்டுமொரு முக்கிய பொறுப்பு சுமத்தப்பட்டிருப்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். முப்பது வருடகால யுத்தத்தினால் பெற்ற அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட சர்வதேச பயங்கரவாதத்திற்கே இப்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி நாம் முகங்கொடுத்தது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பிரச்சினையல்ல. அது முழு உலகம் முகங்கொடுத்திருக்கும் ஒரு பிரச்சினையாகும். சர்வதேசமும் அதைதான் கூறுகின்றது.
இந்த சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இலங்கை புலனாய்வு பிரிவினருக்கே பாரிய பொறுப்புள்ளதாக நான் கருதுகின்றேன். புலனாய்வு பிரிவுகளின் நிபுணத்துவமிக்க வல்லுனர்களின் அனுபவம், தொழில் முதிர்ச்சி போன்றவற்றின் ஊடாக சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கும் புலனாய்வு பிரிவினருக்கும் ஆற்றல் உள்ளது என்பதை நான் மிக உறுதியாக நம்புகின்றேன்.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கைது செய்ய முடிந்துள்ளதுடன், இடம்பெற்ற மோதல்களின்போது சிலர் உயிரிழந்திருப்பதால் விரைவாக இலங்கையில் நிலையான சமாதானத்தை நிலைநாட்ட முடியுமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எம்மைவிட பலசாளிகளான நாடுகளின் தலைவர்கள் மற்றும் போர் நிபுணர்களின் கருத்துகளுக்கமைய மத அடிப்படை வாதத்தை முன்னிறுத்தி தோற்றுவிக்கும் பயங்கரவாத சம்பவங்கள் உலகில் எப்போது எந்த இடத்தில் எவ்வாறு இடம்பெறும் என்பதை எந்தவொரு ஆட்சியாளனுக்கோ போர் நிபுணர்களுக்கோ முன்கூட்டியே தெரிவிப்பதற்கான ஆற்றல் இல்லை என்பதே அவர்களின் கருத்தாகும்.
கடந்த மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டின் மகத்துவம் வாய்ந்த கத்தோலிக்க வணக்கஸ்தலம் ஒன்று தீக்கிரையானதை நாம் அனைவரும் அறிவோம். ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் வேறு பல உலக நாடுகளிலும் இந்த பயங்கரவாத அமைப்பு குண்டுத் தாக்குதல்களின் மூலம் பலரை கொலை செய்திருக்கின்றது. ஆகையால் இந்த சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு நாம் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முப்பது வருடகால யுத்த அனுபவங்களுடன், இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்து பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு நாட்டின் நிலையான சமாதானத்தை உறுதி செய்வதற்கு அரசாங்கத்திற்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் ஆற்றல் இருக்கின்றது என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.
முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து யுத்த வெற்றியின் பத்தாண்டு நினைவு தினத்தை கொண்டாடும் இன்று இராணுவ வீரர்களுக்கு எனது மரியாதையினை செலுத்தும் அதேவேளை, இந்த நினைவு தின விழாவை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய முப்படையினர், பொலிசார். பாதுகாப்பு அமைச்சு, ஏனைய அமைச்சுக்கள், இந்த செயற்பாடுகளுக்கு தலைமைதாங்கிய இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, தேசிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜன்மிக்க லியனகே உள்ளிட்ட பணிக்குழாமினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
யுத்த வெற்றியின் பத்தாண்டு நிறைவடையும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த அனுபவங்களை பயன்படுத்தி நிலையான சமாதானத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் நல்லொழுக்கமிகுந்த சமூகத்தையும் சுதந்திரமும் ஜனநாயகமும் தலையோங்கிய சமுதாய சூழலையும் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்ற வேண்டுகோலை உங்களிடத்தில் முன்வைப்பதுடன், பௌத்த மதத்தை பின்பற்றுபவன் என்ற வகையில் யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் ஆத்மசாந்தியை வேண்டி பிரார்த்தித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.