பாதுகாப்புத் துறை வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனாவிடமிருந்து இலங்கைக்கு ரூபா 410 கோடி அன்பளிப்பு

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்குமான ஒத்துழைப்பை மேம்படுத்தி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (16) காலை நாடு திரும்பினார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடல் வெற்றிகரமானதாக அமைந்திருந்தது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீனா இலங்கைக்கு வழங்கும் என சீன ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

மேலும் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அவசரகால நிலைமைகளுக்கு மத்தியில் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளுக்கு ரூபா 260 கோடி நிதி உதவியை ஜனாதிபதி அவர்களின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கம் வழங்கியதுடன், பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதியான 100 ஜீப் வண்டிகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கும் இணக்கம் தெரிவித்தது.

பயங்கரவாத நோக்கங்களுக்காக இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு சீனாவின் உதவியை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கையின் பாதுகாப்புத் துறையின் மூலோபாய ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குவதற்கும் உடன்பாடு காணப்பட்டதுடன், இலங்கையின் தற்போதைய சவால்களுக்கு தீர்வாக இனவாத பிரசாரங்கள், போலி தகவல்கள் பரப்பப்படுதல் குறித்த செயற்பாடுகள் மற்றும் இணைய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மென்பொருளுடன் கூடிய தொழிநுட்ப உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கும் சீனா இணக்கம் தெரிவித்திருப்பது ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நன்மையாகும்.

ஜனாதிபதி அவர்களுக்கும் சீன பிரதமர் லீ குவெங் அவர்களுக்குமிடையில் பீஜிங் நகரில் இடம்பெற்ற சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சீனா இலங்கையுடன் கைகோர்த்திருப்பதாக சீன பிரதமர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் அதிக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதுடன், இலங்கையில் சீனா பாரிய முதலீடுகளையும் செய்துள்ளது. அரச தலைவர் என்ற வகையில் நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை மிகவும் சிறப்பாக முகாமைத்துவம் செய்துள்ள நிலையில் இலங்கையில் முதலீடு செய்துள்ள மற்றும் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இந்த அனைத்து சந்திப்புகளின்போதும் விளக்கமளித்தார்.

இதேநேரம், பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பயங்கரவாதத்தை உலகிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென உலகத் தலைவர்கள் முன்னிலையில்  தெரிவித்தார். பயங்கரவாத சவாலுக்கு முகங்கொடுத்து அதற்கெதிராக விரிவானதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களின் உரை மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட சுமார் இரண்டாயிரம் பிரதிநிதிகளின் விசேட கவனத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.