சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெற்ற ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 2019.05.15

ஆசிய நாகரிகத்தைப் பற்றிய ஒரு சர்வதேச மட்டத்திலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பினை எமக்கு பெற்றுத்தந்ததையிட்டு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களுக்கும் சீன அரசுக்கும் மக்களுக்கும் எனது கௌரவம் கலந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக ஒரு நாகரிகத்தின் மூலம் இன்னொரு நாகரிகத்தினை தாழ்த்த முடியாது என்ற கோட்பாடும் கொள்கையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு விடயமாகும். உலக நாகரிகங்கள், கலாசாரங்கள், இன தனித்துவங்கள் ஆகிய துறைகளைப் பற்றிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் இடம்பெறும் இந்த வேளையிலும் இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் இலங்கையின் நாகரிகத்தையும் இலங்கையின் தனித்துவத்தையும் அதன் மாபெரும் கலாசாரத்தையும் கண்களுக்கு புலப்படாத இன்னுமொரு கலாசாரத்திற்கு அடிமையாகிவிட இடமளிக்க முடியுமா என்ற கேள்விக்குறியுடனேயே நான் இருக்கின்றேன்.

அதற்கு காரணம் எனது நாடு எந்தவொரு நாட்டுக்கோ ஏதேனுமொரு இனத்திற்கோ வேறொரு நாகரிகத்திற்கோ கலாசாரத்திற்கோ அச்சுறுத்தலாக அமையாத வகையில் மிகவும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இருந்துவந்த நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். எனினும் நாம் ஒருபோதும் எதிர்பாராத பயங்கரவாதக் குழுவொன்றினால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி எமது நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலினால் பெருமளவு உயிர்களை இழக்க நேர்ந்ததையிட்டு நாம் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பதனாலேயே அக்கேள்வி எழுந்திருக்கின்றது.

நாம் ஒரு சிறிய நாடாக, சிறிய இனமாக இருந்தபோதிலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்ட தனித்துவமும் பெருமிதமும் எமக்கு இருக்கின்றது. நவீன இலங்கையின் நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த பௌத்த நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

எமது நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் உள்ளிட்ட இனத்தவர்களும் பௌத்த தர்மம், இந்து தர்மம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை பின்பற்றுபவர்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் பல்வேறு புறச் சக்திகளால் எமது நாகரிகத்தின் மீதும் கலாசாரத்தின் மீதும் விடுக்கப்படுகின்ற சவால்களின் போது நாம் அனைவரும் மிகுந்த ஒற்றுமையுடன் ஒன்றுபட்டிருத்தல் கட்டாயத் தேவையாகும் என நான் நம்புகின்றேன்.

வேறுபட்ட உலக தேவைகளுக்காக எமக்கே உரித்தான எமது நாகரிகத்தையும் கலாசாரத்தையும் அழித்துவிட முடியுமா என்ற விடயத்தை இங்கு நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவைப் போன்ற உயரிய நாகரிகத்தைக் கொண்ட ஒரு நாடு இத்தகைய மாநாட்டை ஏற்பாடு செய்வதன் மூலம் உலகிற்குப் பெற்றுக்கொடுக்கும் முன்னுதாரணமும் வழிகாட்டலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

உலகவாழ் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சகவாழ்வு, நட்புத்தன்மை ஆகியவற்றின் ஊடாக எழுகின்ற மனித நேயத்தின் குரலுக்கு ஒரு பலமான அடித்தளம் அமைய வேண்டுமாயின், நாம் அனைவரும் தனிப்பட்ட ஒவ்வொரு இனங்களுக்கும் உரித்தான நாகரிகம், கலாசாரம் ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாகும் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகையால் இன்றைய உலகில் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு கொந்தளிப்புகள், மோதல்கள்,  பிளவுகள் ஆகியன மூலம் ஒருவரை தாழ்த்திக்கொண்டு இன்னொருவர் உயர்வதற்கு எடுக்கின்ற முயற்சிகளின் போது நாம் அனைவரும் ஏனையோரின் கலாசாரம், தனித்துவம், நாகரிகம், இனத்துவம் ஆகியவற்றிற்கு மதிப்பளித்து அவற்றை ஏற்று செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன். அவ்வாறு ஏற்படுத்திக் கொள்கின்ற புரிந்துணர்வு மூலம் ஆசிய நாட்டவர்கள் என்ற வகையில் நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய பிணைப்பு மிக முக்கியமாகும்.

ஆசிய நாடுகளில் நாகரிகங்களுக்கும் கலாசாரங்களுக்கும் இடையில் பாரிய பிணைப்பு இருப்பதாகவே நான் காண்கின்றேன். இந்த நாடுகளின் நாகரிகமும் கலாசாரமும் ஒரே மாதிரியான பாதையில் பயணிப்பதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால் ஆசிய நாட்டவர்கள் என்ற வகையில் இந்த பிணைப்பு, ஒற்றுமை ஆகியவற்றுடன் நாம் முன்னோக்கிச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

உலகில் ஏற்படுகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொரு இனத்தினதும் நாகரிகம் மற்றும் கலாசாரம் ஆகியன பயணிக்கின்றன என்பதை இங்கு நான் குறிப்பிட வேண்டும். ஒரு நாட்டின் நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சட்டத்தின் மூலமும் அரசியல்யாப்பு மூலமும் சர்வதேச கட்டளைகள் மூலமும் ஒருபோதும் அடக்க முடியாது என்பது எனது நம்பிக்கையாகும்.

ஆகையால் நாம் அனைவரும் நமக்கே உரித்தான நாகரிகம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் முக்கியமான குணாம்சங்கள் ஊடாக இத்தகையதோர் மிக முக்கியமான கலந்துரையாடலில் எமது பிணைப்புக்களைப் பலப்படுத்திக் கொள்வதோடு நம் அனைவரினதும் கௌரவத்தையும் தனித்துவத்தையும் இனத்துவத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு பரந்ததோர் சர்வதேச செயற்திட்டமொன்றின் அவசியத்தை நான் உணர்கின்றேன். ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சந்திப்புக்கள் மூலமாக அதை உருவாக்குவது மிகவும் நல்லது என்பதே எனது நம்பிக்கையாகும்.

குறிப்பாக சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கின்ற பயங்கரவாத அமைப்புக்கள் மத ரீதியிலான தீவிரவாதங்கள் ஆகியவற்றை தோல்வியடையச் செய்து சுதந்திரமாகவும் அமைதியாகவும் இருந்துவரும் நாடுகளுக்கு தமது நாட்டின் தனித்துவத்தையும் கௌரவத்தையும் பாதுகாத்துக் கொண்டு சுதந்திரமான, அமைதியான ஜனநாயக சமூகத்தில் வசிப்பதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் ஆகியவற்றைக் கொண்டு உருவாகின்ற பயங்கரவாதத்திற்கு முகங்கொடுத்து, அவற்றை அழித்து சர்வதேச பயங்கரவாதத்தினை ஒழித்துக் கட்டுவதற்கு நாம் அனைவரும் இன ரீதியில் நட்புறவுடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது என்றே நான் காண்கின்றேன்.

ஆகையால் ஆசிய நாட்டவர்களின் நாகரிகம் பற்றிய இத்தகைய கலந்துரையாடலில் சர்வதேச தீவிரவாத பயங்கரவாதம், மத தீவிரவாத பயங்கரவாதம் ஆகிய இவ்வனைத்தையும் தோல்வியுறச் செய்வதற்காக இம்மாநாட்டுக்கு வருகைத்தந்த உங்கள் அனைவரினதும் குரல், ஒற்றுமை, இணக்கப்பாடு ஆகியன மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. கருத்து ரீதியிலான ஒற்றுமை, உயரிய நட்புத்தன்மை ஆகியவற்றை ஒரு கூட்டாக சீன ஜனாதிபதி மேன்மைதங்கிய ஷீ ஜின்பிங் அவர்களின் தலைமையில் உருவாக வேண்டும் என்ற முன்மொழிவுடன்  எனது இந்த உரையினை நிறைவு செய்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்