பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான ஆற்றல் எமக்கு உண்டு – ஜனாதிபதி

அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களினால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல்கள் சார்ந்த வர்த்தக துறையை மீண்டும் கட்டியெழுப்பி அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கான அமைச்சரவை உப குழுவொன்றினை நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அத்தோடு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக சலுகை அடிப்படையில் நிதியுதவிகளை வழங்குதல் உள்ளிட்ட உதவிகள் தொடர்பாக நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறை சார்ந்த வர்த்தகர்களுடன் 29ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பயங்கரவாதத்தை விரைவில் தோற்கடிப்பதற்கு உறுதியான ஆற்றல் காணப்படுவதாக இதன்போது வலியுறுத்தினார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேடுதல்கள் தற்போது நாடளாவிய ரீதியில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, நாட்டின் பாதுகாப்புத் துறை மீது தான் பூரண நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எந்தவித பின்னடைவுகளுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இதனால் எவரும் அனாவசியமாக அச்சப்படத் தேவையில்லை என்பதோடு இன்று முதல் நாட்டின் சகல செயற்பாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

வர்த்தக துறை சார்ந்த இடங்களுக்கு பாதுகாப்புத் தேவையாயின் அதனை வழங்குவதற்கு முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த நிலைமையில் இருந்து மீண்டும் தனது வர்த்தகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வர்த்தக துறை சார்ந்தோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒத்துழைப்புகளும் குறைவின்றி பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அது தொடர்பான வேண்டுகோள்களை தனிப்பட்ட ரீதியிலேனும் தன்னை சந்தித்து முன்வைக்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இச்செயற்பாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது வர்த்தக சமூகத்தை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு சுற்றுலாத்துறையினால் கிடைக்கும் விசேட உதவிகளை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இந்த துரதிஷ்டவசமான நிகழ்வினால் எதிர்நோக்க நேர்ந்துள்ள சிக்கலான நிலைமை தொடர்பில் சகல வர்த்தக துறையினருக்கும் வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாடு எதிர்நோக்க நேர்ந்துள்ள இந்த துன்பியல் சம்பவம் தொடர்பாக ஒருவருக்கொருவர் குறைகூறிக்கொண்டிருப்பதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்பி நாட்டில் சமாதானத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசௌகரியமான நிலையை சமநிலைப்படுத்தி சுற்றுலாத் துறையையும் ஹோட்டல் துறை சார்ந்த வர்த்தகத்தையும் மீண்டும் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வர்த்தக சமூகத்தினர் இதன்போது முன்வைத்தனர்.

வர்த்தகர் ஹெரி ஜயவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில் சர்வதேச இயக்கமான இந்த பயங்கரவாத குழுவினரை மிக வெற்றிகரமாக எதிர்கொண்டு விரைவாக மீள் எழுந்துள்ள ஒரே நாடு இலங்கையாகும் எனக் குறிப்பிட்டார். அதற்கான கௌரவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களையும் எமது இராணுவத்தினரையுமே சாருமென தெரிவித்த ஹெரி ஜயவர்த்தன, எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்த பயங்கரவாதம் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு, நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

பயங்கரவாத சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி அவர்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் பாராட்டுத் தெரிவித்த ஹெரி ஜயவர்த்தன, பயங்கரவாதத்திற்கெதிராக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட நேரடியான நடவடிக்கைகளையும் பிரகடனங்களையும் நன்றியுடன் நினைவுக்கூரியதோடு அவையே தற்போதைய தேவையாகும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த, வர்த்தகர் தம்மிக பெரேரா உள்ளிட்டோர் சிலர் வர்த்தக சமூகத்தினர் சார்பில் கருத்துத் தெரிவித்த அதேவேளை, இந்த இக்கட்டான சூழ்நிலையை மீளக்கட்டியெழுப்புவதற்கான சக்தியாக செயற்படுதல் தொடர்பாக அனைவரும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, மலிக் சமரவிக்ரம, இரான் விக்ரமரத்ன, ரஞ்சித் அலுவிகாரே உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர், பேராசிரியர் லலித் சமரகோன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் வர்த்தக சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட வர்த்தக சமூகத்தினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.