2017 ஆம் ஆண்டில் இலங்கையின் இலக்கிய துறைக்கு தமது இலக்கிய படைப்புக்களின் ஊடாக பங்களிப்பு வழங்கியமையை பாராட்டும் வகையிலேயே எழுத்தாளர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இலங்கையின் இலக்கிய துறைக்கு அருஞ்சேவை ஆற்றிய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான இலக்கிய படைப்பாளர்களுக்கு வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் “சாகித்ய ரத்ன” கௌரவ விருது ஜனாதிபதி அவர்களால் இதன்போது வழங்கப்பட்டது. சிங்கள மொழியில் பேராசிரியர் கே.என்.ஓ.தர்மதாச, தமிழ்மொழியில் முருகேசு பொன்னம்பலம் மற்றும் ஆங்கில மொழியில் பேராசிரியர் கனநாத் ஒபேசேகர ஆகியோரே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பேராசிரியர் கனநாத் ஒபேசேகரவுக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மகள் பேராசிரியர் நளனிக்கா ஒபேசேகர பெற்றுக்கொண்டார்.
அரச இலக்கிய ஆலோசனை பேரவை, இலங்கை கலா மன்றம், கலாசார அலுவல்கள் திணைக்களம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் இந்த விருது விழா, 61வது முறையாகவும் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
வருடத்தின் அரச இலக்கிய விருது வழங்கப்பட்ட இலக்கிய நூல்களும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் அனுஷா கோகுல, கலா மன்றத்தின் ஆலோசகர் பேராசிரியர் சமந்த ஹேரத் உள்ளிட்ட அதிதிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.