ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் மேற்படி நிறுவன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று 05ம் திகதி இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி [USAID], சர்வதேச நாணய நிதியம், சர்வதேச அபிவிருதிக்கான ஐக்கிய அமெரிக்க உதவி நிறுவனம், கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் [KOKA] ஆகிய முக்கிய சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இந்த சர்வதேச நிதி நிறுவனங்கள் வழங்கிவரும் உதவிகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்காலத்தில் மிகவும் விரிவான பல்வேறு துறைகளினூடாக இந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் 9 மாகாணங்களிலும் சமமான அபிவிருத்தியை முன்னெடுத்து அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிடைக்கச் செய்வது தனது நோக்கமாகுமென்றும் தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக அழிவுக்குள்ளான வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்து அம்மக்களுக்கு அபிவிருத்தி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்தும் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனங்களின் உதவியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் நாட்டு மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக வறுமையொழிப்பு ஆண்டை பிரகடனப்படுத்தி அரசாங்கம் விரிவான நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதன்பொருட்டு சகல தரப்பினரதும் உதவியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88% வீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் எஞ்சியுள்ள 12 வீதத்தையும் துரிதமாக நிறைவு செய்ய வேண்டுமென்ற நோக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பின்மை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகளை கண்டறிவதற்கும் போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துள்ளாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி செயன்முறைகளை வெற்றிபெறச் செய்வதற்கு அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அனைவரையும் ஒன்றிணைத்து அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நோக்கங்களை வெற்றிகொள்வது தமது எதிர்பார்ப்பாகும் என்றும் மேலும் தெரிவித்தார்.
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை நேற்று தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவ்வறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விரைவில் அமைச்சரவை உப குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறித்தும் கருத்து தெரிவித்தார்.
காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களின் நலன் பேணலுக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவி வழங்குமாறும் ஜனாதிபதி அவர்கள், பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஊழல், மோசடிகளைத் தடுத்து முடிவுகட்டி தூய்மையான அரசாட்சியை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது நினைவுகூர்ந்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஹானா சிங்கர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.