இலங்கையை தொழில் முயற்சியாளர்களின் சொர்க்கபுரியாக மாற்றும் நோக்கில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள என்டர்பிரைஸ் வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 4.00 மணியளவில் கண்காட்சியைத் திறந்து வைக்க உள்ளார். அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல பிரமுகர்கள் இதில் பங்கேற்ற இருக்கிறார்கள்.
நல்லிணக்க அரசாங்கம் பதவியேற்று கடந்த 3 வருட காலத்திற்குள் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் 2025ஆம் ஆண்டு வரையான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இந்தக் கண்காட்சியில் விளக்கமளிக்கப்படும்.
தொழில் முனைவோர் ஒரு இலட்சம் பேரை உருவாக்கும் பாரிய வேலைத்திட்டத்தின் கீழான தேசிய கண்காட்சி இதுவாகும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லிணக்க அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் முன்னெடுத்த முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் எண்ணக்கருவிற்கு அமையவே என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் சுபீட்சம் மிகு நாடாக இலங்கையை மாற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நீண்ட கால நோக்கத்தையும் இந்தக் கருத்திட்டம் பிரதிபலிக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்கு அறிவுசார்ந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்பி, வர்த்தக மற்றும் பொருளாதார மையமாக இலங்கை மாற்றுவதும் ஒரு நோக்கமாகும்.
'மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் - ஆயிரம் அறுவடை' என்ற தொனிப்பொருளில் கண்காட்சி இடம்பெறுகிறது.
புதிய வர்த்தக முயற்சிக்கான அரசாங்கம் வட்டி செலுத்தும் கடன் முறையின் கீழ் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கு 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
22 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பில் இடம்பெறவிருக்கும் இந்தக் கண்காட்சி நாளை மறுதினம் வரை இடம்பெறவிருக்கிறது. கண்காட்சிக்கு அமைவாக கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சியின் மூலம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்வாண்மை கலாசாரத்தை கிராமப்புறங்களுக்குக்கொண்டு செல்லும் நோக்கில் 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' கடன் திட்டத்தை அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்திருந்தது. கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்திருந்த 'கம்பெரலிய' திட்டம் தொடர்பிலும் இந்தக் காட்சியில் பொது மக்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
நாட்டில் மிகவும் வறுமைக்கு உட்பட்ட மாவட்டம் என்பதால் மொனறாகலையில் இக்கண்காட்சியை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
விவசாய வலயம், அரசாங்க நிறுவனங்கள் வலயம், கல்வி வலயம், பசுமைப் புரட்சி வலயம், நல்லிணக்க வலயம், விளையாட்டு வலயம், வர்த்தக வலயம், ஊடக மற்றும் வெளியீட்டு வலயம் எனப் பல்வேறு வலயங்கள் இந்தக் கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக சகல துறைகளுக்கு வழங்கப்படும் கடன்வசதிகள் தொடர்பிலும் விரிவான விளக்கமளிக்கப்படவுள்ளன.
இந்தக் கண்காட்சியில் 512 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றும் ஆரம்பமாகும் இந்தக் கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தினமும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.