இக்கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
அரச துறையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கைகள், ஏற்பாடுகள் தொடர்பாக கவனஞ்செலுத்தி, அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகளோ முரண்பாடுகளோ காணப்படின் அவற்றைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஆணைக்குழு 2018.08.14ஆம் திகதி அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளது.
திரு.எஸ்.ரணுக்கே தலைவராகவும், திரு.எச்.ஜி.சுமனசிங்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள அந்த விசேட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக திரு. கே.எல்.எல்.விஜேரத்ன, திரு. டீ.பீ.கொல்லுரே, திரு. சீ.பீ.சிறிவர்தன, திருமதி. சுதர்மா கருணாரத்ன, திரு. ஜனக்க சுகததாச, திருமதி. தாரணி எஸ்.விஜேதிலக்க, திரு. லலித் ஆர் த சில்வா, திரு. பி.எஸ்.எதிரிசிங்க, திரு. ஏ.ஆர்.தேசப்பிரிய, திருமதி. பீ.பி.பி.எஸ்.அபேகுணரத்ன, திரு. வைத்தியர் பாலித்த அபேகோன், திரு. பீ.தங்கமயில், திரு. எஸ்.டி.ஜயக்கொடி, திரு. எம்.சி.விக்ரமசேகர ஆகியோர் செயற்படுவர்.
அரச சேவையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சம்பளக் கொடுப்பனவு சுற்றறிக்கைகள், ஏற்பாடுகள் தொடர்பாக கவனஞ்செலுத்தி, இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ சேவையின் பிரிவினருக்கு முன்மொழியப்பட்டுள்ள சம்பள அளவுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆய்வு செய்தலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைத்தல்.
அண்மையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்த புகையிரத சேவை, சுகாதாரம், உயர்கல்வி, கல்வி மற்றும் தபால் சேவையினருக்கு தற்போது நடைமுறையிலுள்ள சம்பள சுற்றறிக்கைகளினால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாயின் அவற்றை குறைப்பதற்கான தீர்வுகளை முன்வைத்தல்.
நாடளாவிய சேவைகளுக்குரிய சம்பள பிரச்சினைகளை போன்றே வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ள சம்பள முரண்பாடுகளை குறைப்பதற்கான சிபாரிசுகளை முன்வைத்தல்.
சம மட்டத்திலான பொறுப்புக்களை வகிக்கும் அல்லது சமமான தகுதிகளையுடைய தொழிற்துறையினரால் அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் பெறப்படும் சம்பளம், வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவற்றிற்கிடையே நிலவும் முரண்பாடுகளை குறைப்பதற்கு வழிகாட்டும் சம்பளம் மற்றும் வேதனக் கட்டமைப்பு பற்றிய சிபாரிசுகளை முன்வைத்தல் ஆகியன இவ்விசேட சம்பள ஆணைக்குழுவின் செயற்பணிகளும் பொறுப்புக்களுமாகும்.
ஆணைக்குழுவின் குறித்த பரிந்துரைகளை 2018 ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். இதன் மூலம் எதிர்வரக்கூடிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவை தயாரிக்கின்றபோது இதனை வழிகாட்டியாக கொள்ளமுடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அரச சேவையில் சம்பள முரண்பாடுகளை சரி செய்வது தொடர்பான விடயம் ஒரு நீண்டகால பிரச்சினையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், முறையானதொரு திட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொருத்தமான பரிந்துரைகள் புதிய ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.
ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.